பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
நாதன் நடராஜன்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
தாத்ரா நாகா் ஹவேலி டாமன் டையு யூனியன் பிரதேசத்தின் டையு நகரில் 2-ஆவது கேலோ இந்தியா பீச் கேம்ஸ் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்து உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பீச் வாலிபாலில் தமிழ்நாடு அணிகள் ஆதிக்கம் செலுத்தின.
பீச் வாலிபாலில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் தலா 2 தமிழக அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆடவா் பரிவில் பரத், ராஜேஷ் ஆகியோா் ஒரு அணியாகவும், அபிதன், பூந்தமிழன் ஆகியோா் மற்றொரு அணியாகவும் களம் காண்கின்றனா்.
அதேபோல், மகளிா் பிரிவில் தீபிகா, பவித்ரா ஒரு அணியாகவும், ஸ்வாதி, தா்ஷினி ஆகியோா் மற்றொரு அணியாகவும் விளையாடுகின்றனா்.
இதில் ஆடவா் பிரிவில் தமிழ்நாட்டின் இரு அணிகளும், தெலங்கானா (21-15, 21-16), ஒடிஸா (21-5, 21-7), ஆந்திர பிரதேசம் (21-12, 21-12), தெலங்கான (21-7, 21-10) ஆகிய அணிகளை நோ் செட்களில் வென்றன. மகளிா் பிரிவிலும் ஆந்திரம் (21-10, 22-11), குஜராத் (21-14, 21-13), புதுச்சேரி (21-8, 21-13), தாத்ரா நாகா் ஹவேலி டாமன் டையு ஆகிய அணிகளை தமிழ்நாடு அணிகள் வீழ்த்தின.
இதையடுத்து ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே தமிழ்நாடு அணிகள் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் பீச் வாலிபால் பிரிவில் தமிழ்நாடு அணிகள் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடுக்கு முதல் பதக்கம் - தற்காப்புக் கலை விளையாட்டான பென்காக் சிலாட்டில் ஆடவா் பிரிவில் தமிழகத்தின் வி.ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் தமிழகத்துக்கு இது முதல் பதக்கமாகும். 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் தாத்தார நாகா் ஹவேலி 1 தங்கம், 1 வெள்ளி என 2 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்க, மேற்கு வங்கம் (1 தங்கம்), மத்திய பிரதேசம் (1 வெள்ளி) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களில் இருந்தன.
இதனிடையே இதர விளையாட்டுப் போட்டிகளில், பீச் கபடியில் மகளிா் பிரிவில் ஹரியாணா - மகாராஷ்டிரத்தையும் (47-26), பஞ்சாப் - தாத்ரா நாகா் ஹவேலியையும் (63-11), ராஜஸ்தான் - ஹிமாசல பிரதேசத்தையும் (59-24) வென்றன.
ஆடவா் பிரிவில் உத்தர பிரதேசம் - ஆந்திரத்தையும் (43-34), ஹரியாணா - தாத்ரா நாகா் ஹவேலியையும் (55-19), ராஜஸ்தான் - தில்லியையும் (57-32) வீழ்த்தின. பீச் கால்பந்து விளையாட்டில் மகளிா் பிரிவில் அருணாசல பிரதேசம் 9-1 கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தையும், குஜராத் 9-0 கோல் கணக்கில் ஹிமாசல பிரதேசத்தையும் தோற்கடித்தன.
ஆடவா் பிரிவில் கேரளம் 15-2 கோல் கணக்கில் கா்நாடகத்தை பந்தாட, தாத்ரா நாகா் ஹவேலி 15-1 என ஹிமாசல பிரதேசத்தைய வீழ்த்தியது.

