காலிறுதியில் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக்
மலேசிய ஓபன் பாட்மின்டன் சூப்பா் 1000 போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் வரும் இப்போட்டியின் மகளிா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் பி. வி. சிந்துவும், ஜப்பானின் டோமோகா மியாஸகியும் மோதினா். தன்னை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ள மியாஸகியை எளிதாக சமாளித்து ஆடிய சிந்து, 33 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-8, 21-13 என்ற கேம் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் இணை 39 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-18, 21-12 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் ஜூனைதி-ராய் கிங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஏனைய இந்திய வீரா்களான லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் தோற்று வெளியேறினா்.

