போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இன்றுமுதல் இரு மாதங்களுக்கு ஐபிஎல் திருவிழா: பெங்களூரு - ஹைதராபாத் மோதலுடன் தொடக்கம்

இந்தியன் பிரீமியா் லீக்கின் (ஐபிஎல்) 19-ஆவது ஆண்டு போட்டி, பெங்களூரில் சனிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:40 am

தினமணி செய்திச் சேவை

இந்தியன் பிரீமியா் லீக்கின் (ஐபிஎல்) 19-ஆவது ஆண்டு போட்டி, பெங்களூரில் சனிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ரசிகா்கள் கொண்டாடும் நட்சத்திர வீரா்களான எம்.எஸ்.தோனி, ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் களம் காணும் போட்டியாகவும், சா்வதேச போட்டிகளில் வாய்ப்பு பெறுவதற்காக திறமையான வீரா்கள் தங்களை நிரூபிக்கும் களமாகவும், இளம் வீரா்கள் பலரை அறிமுகம் செய்யும் மேடையாகவும் இந்த ஐபிஎல் போட்டி உள்ளது.

வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் கடந்த ஆண்டு வாகை சூடியும், கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 11 ரசிகா்கள் உயிரிழந்த காரணத்தால் பெங்களூரு அணி முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போனது. இந்த முறை மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்புடன் அந்த அணி வருகிறது.

முந்தைய 18 சீசன்களில் பெருவாரியான கோப்பைகளை வென்றிருக்கும் மும்பை இண்டியன்ஸ் (5), சென்னை சூப்பா் கிங்ஸ் (5), கொல்கத்தா நைட் ரைடா்ஸ் (3) அணிகளுக்கு, கடந்த சீசன் அவ்வளவாக சோபிக்கவில்லை. எனவே தங்களின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியுடன் அவை களம் காண்கின்றன. இவை தவிர மற்ற அணிகளும், தங்களின் முத்திரையை பதிக்கும் திட்டத்துடன் இந்த ஆண்டு போட்டியில் அடியெடுத்து வைக்கின்றன.

போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் பலம், பலவீனம், வாய்ப்புகள் குறித்து ஒரு பாா்வை...

சென்னை சூப்பா் கிங்ஸ் (5 முறை சாம்பியன்)

கடந்த ஆண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் கடைசி இடம் பிடித்த சென்னை, தனது அடையாளத்தை முழுமையாக இழந்துவிடாமல், இளமைத் துடிப்புக்கு முன்னுரிமையுடன் அணியை மறுகட்டமைப்பு செய்துள்ளது.

புதிதாக இணைந்திருக்கும் சஞ்சு சாம்சனுடன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். நூா் அகமது, அகீல் ஹுசைன், ராகுல் சஹா் என சுழற்பந்து வீச்சில் நம்பகமான வீரா்கள் இருப்பது, சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். யு19 சாம்பியன் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, டெவால்டு பிரெவிஸ் ஆகியோா் அணியின் ஸ்டிரைக் ரேட்டுக்கு உதவுவாா்கள்.

ஜடேஜா, அஸ்வின் இல்லாதது வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. நேதன் எல்லிஸ் விலகியதால் பௌலிங்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் வீா், காா்த்திக் சா்மா என அதிக அனுபவம் இல்லாத மிடில் ஆா்டா் தடுமாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

(ரன்னர் அப்)

கடந்த ஆண்டு 5-ஆம் இடம் பிடித்த டெல்லி, இந்த முறையும் அக்ஸர் படேல் தலைமையில் களமிறங்குகிறது.

அவரும், குல்தீப் யாதவும் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கின்றனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், ஆசுதோஷ் சர்மா என லோயர் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் பேட்டர்கள் பலம் சேர்க்கின்றனர். டாப் ஆர்டரில் நம்பகமான வீரராக கே.எல்.ராகுல் இருக்க, பதும் நிசங்கா, நிதீஷ் ராணா ஆகியோர் துணையாக உள்ளனர்.

பெளலிங் நட்சத்திரம் மிட்செல் ஸ்டார்க், தொடக்கத்தில் சில ஆட்டங்களில் இல்லாதது சற்று பின்னடைவாக இருக்கிறது. டாப் ஆர்டருக்குத் தகுதியான வீரர்கள் நிர்ணயிப்பதில் அணிக்கு தடுமாற்றம் இருக்கலாம். நெருக்கடியான நாக்அவுட் ஆட்டங்களில் டெல்லி திணறுவது தொடர்கிறது. உள்நாட்டு போட்டிகளில் மிளிர்ந்த காஷ்மீர் பெளலர் ஆகிப் நபி இணைந்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ்

(ஒருமுறை சாம்பியன்)

இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத், கடந்த ஆண்டு 4-ஆம் இடம் பிடித்து வெளியேறியது. ஜேசன் ஹோல்டர், டாம் பேன்டனை நம்பகமான வீரர்களாக இம்முறை சேர்த்துள்ளது.

கில், சாய் சுதர்சன் இருவரும் ஸ்கோருக்கு பலம் சேர்க்க, ஜாஸ் பட்லரும் பங்களிக்கிறார். ராகுல் தெவாதியா, ஷாருக் கான் நெருக்கடியான சேஸிங்கில் விளாச, பெளலிங்கில் சிராஜ், பிரசித் மிளிர்கின்றனர். ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ரஷீத் கான் "ஆல்-ரவுண்டர்' பிரிவில் அசத்துவர்.

மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்க்கும் பலமான வீரர்கள் இல்லாதது பாதகம். கடந்த சீசனில், 28 கேட்ச்களை தவறவிட்டது உள்பட, ஃபீல்டிங்கில் மோசமாகச் செயல்பட்டுள்ளது குஜராத். கிளென் ஃபிலிப்ஸ் அதிரடி ஆட்டத்துக்கு மீண்டுள்ளது நம்பிக்கை அளிக்க, பட்லர் கடந்த சில காலமாக சோபிக்காமல் இருப்பது கவலையாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

(3 முறை சாம்பியன்)

இந்த சீசனுக்காக அணியில் பெருமளவு மாற்றம் செய்துள்ள கொல்கத்தா, 10 புதிய வீரர்களை சேர்த்துள்ளது. அஜிங்க்ய ரஹானே கேப்டன்சியில் கடந்த முறை 8-ஆம் இடம் பிடித்தது.

சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி என சுழற்பந்து நட்சத்திரங்கள் நம்பகமான வீரர்களாக இருக்கின்றனர். டி20 உலகக் கோப்பையில் மிரட்டிய ஃபின் ஆலன் பேட்டிங்கில் பலம் சேர்க்க, கேமரூன் கிரீன், ரச்சின், ரமண்தீப் சிங் என பிளேயிங் லெவன் தேர்வுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஹர்ஷித் ராணா இல்லாதது வேகப்பந்து வீச்சில் சறுக்கலை ஏற்படுத்த, அந்தச் சுமை வைபவ் அரோரா, நவ்தீப் சைனி மீது ஏறுகிறது. ரிங்கு சிங் சோபிக்காமல் போனால், லோயர் ஆர்டரில் கைகொடுக்கும் வீரர்கள் இல்லை. காயம் காரணமாக பதிரானா தொடக்க ஆட்டங்களில் விளையாடாதது அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ்

(பிளே ஆஃப்)

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னெள, கடந்த ஆண்டு 7-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

நிகோலஸ் பூரன், ரிஷப் பந்த், எய்டன் மார்க்ரம் என மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் வீரர்கள் அணியின் அடையாளமாக உள்ளனர். அன்ரிஹ் நோர்கியா, ஷமார் ஜோசஃப், மயங்க் யாதவ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் எதிரணி பேட்டர்களை திணறடிக்கலாம்.

வனிந்து ஹசரங்கா, மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது "ஆல்-ரவுண்டர்' இடத்தில் வருகின்றனர். மயங்க், அன்ரிஹ் ஆகியோரோடு முகமது ஷமியும் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், அவர்களின் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ரூ.27 கோடி கொடுத்து வாங்கப்பட்ட கேப்டன் பந்த், கடந்த சீசனில் அதற்கு நியாயம் செய்யவில்லை. ரவி பிஷ்னோய் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சில் ஹசரங்கா தவிர வேறு நம்பகமான வீரர்கள் இல்லை.

மும்பை இண்டியன்ஸ்

(5 முறை சாம்பியன்)

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்த அணி, கடந்த சீசனில் 3-ஆம் இடம் பிடித்தது. 5 முறை சாம்பியன் என்றாலும், கடந்த 6 ஆண்டுகளாக கோப்பையை நெருங்க முடியாத நிலையே தொடர்கிறது.

ரோஹித் சர்மா, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா என அதிரடி வீரர்கள் பேட்டிங்கிலும், ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோர் பெளலிங்கிலும் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். டி காக், வில் ஜாக்ஸ் ஆகியோர் கூடுதல் பலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுழற்பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, சேன்ட்னர் தடுமாறுகின்றனர்.

பாண்டியாவுக்கு பிறகு அதிரடியாக கைகொடுக்கும் வீரர்கள் இல்லாததும், ஒரு வேளை பும்ரா காயம் கண்டால் பெளலிங்கில் மாற்று வீரர் தயாராக இல்லாததும் அணிக்கான பின்னடைவாக உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

(ரன்னர் அப்)

பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் கடந்த ஆண்டு இறுதி ஆட்டம் வரை வந்து கோப்பையை நழுவவிட்டது.

ஷ்ரேயஸ், அர்ஷ்தீப் சிங், யுஜவேந்திர சஹல், பிரப்சிம்ரன் சிங் என அந்நிய வீரர்கள் இன்றி, இந்தியர்களே அணியின் பலமாகத் திகழ்கின்றனர். பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் கூட்டணி அதிரடி தொடக்கங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சென், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் என, ஆல்-ரவுண்டர்கள் ஆதிக்கமும் உள்ளது.

யான்சென், அர்ஷ்தீப் வேகப்பந்து வீச்சில் அச்சுறுத்துகின்றனர். மிடில் ஆர்டரில் நம்பகமான பேட்டர்கள் இல்லாததும், சுழற்பந்து வீச்சில் சஹலுக்கு தோள்கொடுக்கும் வகையிலான வீரர் இல்லாததும் சறுக்கலாக இருக்கிறது. கடந்த சீசனில் கைகொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ், பெரிதாக டி20 விளையாடாத நிலையிலேயே இந்த சீசனுக்கு வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

(ஒருமுறை சாம்பியன்)

கடந்த சீசனில் 9-ஆம் இடம் பிடித்த ராஜஸ்தானுக்கு, இந்த சீசனில் ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியிலும் பெரிதாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

14 வயது இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியுடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அமைக்கும் கூட்டணி, ராஜஸ்தானுக்கு பவர்பிளேயில் பலம் சேர்க்கிறது. கேப்டன் பராக், துருவ் ஜுரெல், ஷுபம் துபேவும் நம்பகமான வீரர்களாக உள்ளனர்.

சுழற்பந்துவீச்சில் சோபிக்காமல் இருந்த அணி, தற்போது ஜடேஜா, ரவி பிஷ்னோய் வருகையால் புதிய உத்வேகம் பெறுகிறது. சஞ்சு சாம்சன் இல்லாத இடத்தை ரியான் பராக் நிரப்புவது சவாலாக இருக்கலாம். காயம் காரணமாக சாம் கரன் இல்லாததும், ஜோஃப்ரா ஆர்ச்சர் தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் அணிக்கு பின்னடைவு. ஆர்ச்சருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

(நடப்பு சாம்பியன்)

18 ஆண்டுகளில் முதல்முறையாகக் கோப்பை வென்று, நடப்பு சாம்பியனாக நம்பிக்கையுடன் இந்த சீசனுக்கு வருகிறது பெங்களூரு. பிரதான வீரர்களை அப்படியே தக்கவைத்து, கூடுதல் பலமும் சேர்த்துள்ளது ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி.

கோப்பை வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி இல்லாததே, பெங்களூருக்கு இந்த சீசனில் பிரதான பலமாக இருக்கிறது. விராட் கோலி, ஃபில் சால்ட் ஆகியோர் பேட்டிங்கில் பலமான தொடக்கம் அளிக்க, டிம் டேவிட், ரொமேரியோ ஷெப்பர்டு, ஜிதேஷ் சர்மா என மிடில் ஆர்டரும் நம்பகமானதாகவே இருக்கிறது.

தேசிய களத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள புவனேஷ்வர்குமாருக்கு இதுவே பிரதான களமாக இருக்கிறது. ஜாஷ் ஹேஸில்வுட், கிருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா சோபிக்காமல் போனால், பெளலிங்கில் கைகொடுக்க வேறு வீரர்கள் இல்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

(ஒருமுறை சாம்பியன்)

கடந்த சீசனில் 6-ஆம் இடத்துடன் நிறைவு செய்த ஹைதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக உள்ளார். எனினும், தொடக்கத்தில் சில ஆட்டங்களுக்கு இஷான் கிஷண் தலைமையேற்க உள்ளதாகத் தெரிகிறது.

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷண் என இடதுகை பேட்டர்கள் பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர். ஹென்ரிச் கிளாசென், லியம் லிவிங்ஸ்டனும் அவர்களுக்குத் துணை நிற்கின்றனர். ஆல்-ரவுண்டர்களாக நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே மிளிர்கின்றனர்.

தொடக்கத்தில் சில ஆட்டங்களுக்கு கம்மின்ஸ் இல்லாதது பெளலிங்கில் பின்னடைவாக இருக்கலாம். ஹர்ஷல் படேல், ஜெயதேவ் உனத்கட், பிரைடன் கார்ஸ் நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. சுழற்பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இல்லை. ஜீஷான் அன்சாரி, ஷிவங் குமார் தோள்கொடுக்க கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.