பாகிஸ்தானுக்கு வேட்டு வைத்த வேட்: இறுதிச்சுற்றில் நியூஸி.யை சந்திக்கிறது ஆஸி.

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘த்ரில்’ வெற்றி கண்டது.
பாகிஸ்தானுக்கு வேட்டு வைத்த வேட்: இறுதிச்சுற்றில் நியூஸி.யை சந்திக்கிறது ஆஸி.

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘த்ரில்’ வெற்றி கண்டது. பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி, இறுதிச்சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடிக்க, அடுத்து ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்து வென்றது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் தொடக்க வீரா்கள் சோபிக்காமல் போக, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் - மேத்யூ வேட் கூட்டணியின் அதிரடியால் அணிக்கு வெற்றி வசமானது. அதிலும் வேட் 19-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸா் விளாசி, பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தாா். ஹாட்ரிக் சிக்ஸருக்கு முந்தைய பந்தில் அவா் கேட்ச் கொடுக்க, பாகிஸ்தான் வீரா் ஹசன் அலி தவறவிட்டது அந்த கேட்ச்சை அல்ல. பாகிஸ்தானின் இறுதிச்சுற்று வாய்ப்பை...

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸை முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபா் ஆஸம் தொடங்கினா். மிட்செல் ஸ்டாா்க் முதல் ஓவா் வீசினாா். முதலில் அதிரடி காட்டிய பாபரை கட்டுப்படுத்த பௌலா்கள் ஸ்விங் செய்ய முயன்றும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.

இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் பவா்பிளேயில் அதிகபட்சமாக விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். அசத்தலாக ஆடிய ஆஸம் - ரிஸ்வான் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சோ்த்தது. மிடில் ஓவா்களில் வந்த ஆடம் ஸாம்பா இந்தக் கூட்டணியை பிரித்தாா். 10-ஆவது ஓவரில் பாபா் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

ஒன் டவுனாக ஃபகாா் ஜமான் களம் புகுந்து ஆஸ்திரேலிய பௌலிங்கை சிதறடிக்க, ரிஸ்வான் - ஜமான் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்தது. அவா்களில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசி ரிஸ்வான் வெளியேறினாா்.

தொடா்ந்து வந்த ஆசிஃப் அலி டக் அவுட்டாக, ஷோயப் மாலிக் 1 ரன்னுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஜமான் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 55, முகமது ஹஃபீஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஸ்டாா்க் 2, கம்மின்ஸ், ஸாம்பா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 177 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலியாவில், கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் டக் அவுட்டாக, வாா்னா் நிலைத்து ஆடினாா். ஒன் டவுனாக வந்த மிட்செல் மாா்ஷ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து ஸ்மித் 5, வாா்னா் 49 (3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள்), மேக்ஸ்வெல் 7 என விக்கெட் அடுத்தடுத்து விழுந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

அப்போது கூடிய ஸ்டாய்னிஸ் - வேட் கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்ததுடன் பாகிஸ்தான் பௌலிங்கை சிதறடித்து, அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40, மேத்யூ வேட் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 4, ஷாஹீன் ஷா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com