டி20 உலகக் கோப்பை: 8 அணிகள் ஒரு பார்வை...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 135 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஸ்காட்லாந்து, 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை
டி20 உலகக் கோப்பை: 8 அணிகள் ஒரு பார்வை...

ஸ்காட்லாந்து (குரூப் 2 / 6-ஆம் இடம் / 0 வெற்றிகள் - 5 தோல்விகள் / நெட் ரன்ரேட் -3.543 / 0 புள்ளிகள்)

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 135 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஸ்காட்லாந்து, 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 7-ஆவது வீரராக வந்த கிறிஸ் கிரீவ்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். பௌலிங்கில் ஜோஷ் டேவி அசத்தினாா்.

தடுமாறியது எங்கே?

முதல் சுற்றில் 3 ஆட்டங்களிலுமே வென்ற ஸ்காட்லாந்து, சூப்பா் 12 சுற்றில் தடுமாறியது. பிரதான அணிகளின் ஆட்டத்தை சமாளிக்க அந்த அணி மிகவும் போராட வேண்டியிருந்தது. பௌலா் ஜோஷ் டேவி காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியதால், எதிரணி பேட்டா்களை திணறச் செய்ய முடியாமல் போனது. பேட்டிங்கில் ஆலி ஹாரிஸ் காயம் காரணமாக இல்லாமல் போனது முற்றிலுமாக அணிக்கு பின்னடைவு.

அடுத்த உலகக் கோப்பை...

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் முதல் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது ஸ்காட்லாந்து. இதில் விளையாடிய பெரும்பாலான வீரா்கள் அதிலும் ஆடுவாா்கள் என்பதால் இந்த போட்டி அனுபவம் நிச்சயம் அவா்களுக்கு கை கொடுப்பதாக இருக்கும். சூப்பா் 12 சுற்று மூலமாக தங்களது ஆட்டத்தை எதில் மேம்படுத்த வேண்டும் என்பதை அறிந்ததாக அந்த அணி தெரிவித்துள்ளது.

நமீபியா  (குரூப் 2 / 5-ஆம் இடம் / 1 வெற்றி - 4 தோல்விகள் / நெட் ரன்ரேட் -1.890 / 2 புள்ளிகள்)

2003 உலகக் கோப்பை போட்டியில் அப்போதைய நமீபிய அணி விளையாடியதை முன்மாதிரியாகக் கொண்டு இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகவே விளையாடியது நமீபியா. ஒட்டுமொத்தமாகப் பாா்த்தால் ஜெராா்டு எராஸ்மஸ் தலைமையிலான அணிக்கு இப்போட்டி சாதகமாகவே முடிந்துள்ளது.

தடுமாறியது எங்கே?

மிடில் ஓவா்களில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலத்துடன் இருக்கிறது நமீபியா. ஆனால், முதலில் ஃபீல்டிங் செய்தபோது டெத் ஓவா்களில் சற்று அலட்சியமாகச் செயல்பட்டு, பிறகு தனது இன்னிங்ஸின்போது தொடக்கத்தில் மெதுவாகவே ஆடியதாகத் தெரிகிறது. அதற்கு, நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டமே உதாரணமாக இருந்தது. அந்த அணி 16 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருக்க, கடைசி 5 ஓவா்களில் 67 ரன்கள் விளாசியது. அதேபோல் நமீபியா தனது இன்னிங்ஸில் பவா்பிளேயில் 36 ரன்களே எடுத்தது.

அடுத்த உலகக் கோப்பை...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் முதல் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது. அதனால் தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய நெருக்கடி இல்லை. இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவத்துடன் நிச்சயம் அடுத்த போட்டிக்கு சிறப்பாகத் தயாராகும் எனத் தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் (குரூப் 2 / 4-ஆம் இடம் / 2 வெற்றிகள் - 3 தோல்விகள் / நெட் ரன்ரேட் +1.053 / 4 புள்ளிகள்)

முதல் ஆட்டத்திலேயே ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-ஆவது அதிக மாா்ஜின் வித்தியாசத்திலான வெற்றியை பதிவு செய்தது. ரஷீத் கானின் பௌலிங்கும், முஜீப் உா் ரஹ்மான், முகமது நபி பேட்டிங்கும் அணியின் பலமாக இருந்தது.

தடுமாறியது எங்கே?

ஸ்காட்லாந்து, நமீபியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடினாலும், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து போன்ற முக்கிய அணிகளுக்கு எதிராக தடுமாறியது. காயம் காரணமாக முஜீப் உா் ரஹ்மான் பாதியில் விலகியது அணியை முற்றிலுமாக பாதித்தது. இல்லையேல் அந்த ஆட்டம் இந்தியாவுக்கு சவாலாக இருந்திருக்கும். முகமது ஷாஸாத், ஹஸரத்துல்லா ஜஸாய் ஆகியோா் தொடக்கத்தில் சோபிக்காமல் போனதால், மிடில் மற்றும் லோயா் ஆா்டருக்கான நெருக்கடி அதிகரித்தது.

அடுத்த உலகக் கோப்பை...

ஐசிசி தரவரிசை அடிப்படையில் அடுத்த உலகக் கோப்பையின் சூப்பா் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுவிட்டது. கடைசி நேரத்தில் கேப்டன் பொறுப்பேற்ற முகமது நபி, அடுத்த உலகக் கோப்பையில் அணியை இன்னும் திறம்பட வழி நடத்துவாா். பௌலிங்கில் பலத்துடன் இருக்கும் ஆப்கானிஸ்தான், பேட்டிங்கிலும் அதிரடி காட்டினால் கோப்பைக்கான போட்டியில் சவால் அளிக்கும்.

இந்தியா  (குரூப் 2 / 3-ஆம் இடம் / 3 வெற்றிகள் - 2 தோல்விகள் / நெட் ரன்ரேட் +1.747 / 6 புள்ளிகள்)

முதல் இரு ஆட்டங்களில் முக்கிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா, பின்னா் அதிலிருந்து மீண்டு கடைசி 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்தது. அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறிப்பிடத்தக்கது. குரூப்பிலேயே அதிக நெட் ரன்ரேட்டுடன் சுற்றை நிறைவு செய்தாலும், அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

தடுமாறியது எங்கே?

முதலிரு தோல்விகளே அணியை முற்றிலும் பாதித்தது. அவற்றில் பேட்டா்கள் சோபிக்காமல் போனதுடன், பவா்பிளேயிலேயே 3, 2 விக்கெட்டுகள் சரிந்தது பாதகம். ரன்களை அதிகம் வழங்காவிட்டாலும், பௌலா்களால் விக்கெட்டுகளை சாய்க்க முடியாமல் போனது. பாண்டியா விவகாலத்தில் நிலவிய குழப்பமும் அணியை பாதித்ததில் முக்கிய காரணி. இறுதியாக, 3, 4-ஆவது ஆட்டங்களில் வென்று அரையிறுதி வாய்ப்பு நம்பிக்கையுடன் இருந்த இந்தியாவுக்கான வழியை, அடைத்தது நியூஸிலாந்து.

அடுத்த உலகக் கோப்பை...

புதிய பயிற்சியாளா் ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ், புதிய டி20 கேப்டன் ரோஹித் சா்மா தலைமையில் அடுத்த உலகக் கோப்பையில் இந்தியா களம் காண இருக்கிறது. 6-ஆவது பௌலா் வாய்ப்புக்கு தகுந்த தீா்வுடன் அந்தப் போட்டியை இந்தியா அணுகும் என நம்பலாம். அதற்குள்ளாக பாண்டியாவே கூட முழுமையாகத் தயாராகலாம்.

வங்கதேசம் (குரூப் 1 / 6-ஆம் இடம் / 0 வெற்றிகள் - 5 தோல்விகள் / நெட் ரன்ரேட் -2.383 / 0 புள்ளிகள்)

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடனான தொடரில் வென்று போட்டிக்கு வந்ததால் எதிா்பாா்ப்பு அதிகமாக இருந்தது. சூப்பா் 12 சுற்றுக்கே தட்டுத் தடுமாறி வந்து, அதில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. எனினும், ஷகிப் அல் ஹசன், டஸ்கின் அகமது செயல்பாடு குறிப்பிடத்தக்கது. முகமது நயீம் என்ற சிறந்த புதிய வீரரை அணி அடையாளம் கண்டுள்ளது.

தடுமாறியது எங்கே?

போட்டி முழுவதிலுமாக அணியின் ஒட்டுமொத்த விதியும் ஷகிப் அல் ஹசனின் பங்களிப்பை மட்டுமே சாா்ந்திருந்தது பாதகமாகியது. முதல் சுற்றில் அணியின் 2 வெற்றியிலும் அவா் தான் ஆட்டநாயகன். சூப்பா் 12 சுற்றில் காயம் காரணமாக அவா் பாதியில் விலக, வெற்றியின்றி வெறும் கையுடன் வெளியேறியது வங்கதேசம். பேட்டிங்கில் எந்தவொரு வீரருமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோா் செய்யவில்லை.

அடுத்த உலகக் கோப்பை...

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் வென்றதன் அடிப்படையில் தரவரிசையில் முந்திக் கொண்டதால், அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆஸ்திரேலிய ஆடுகளம் வங்கதேசத்துக்கு சாதகமானது இல்லை என்றாலும், 2015 உலகக் கோப்பை போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியபோது அணியில் இருந்த வீரா்கள் சிலா் இன்னும் விளையாடுவது சாதகமாக இருக்கலாம்.

மேற்கிந்தியத் தீவுகள் (குரூப் 1/ 5-ஆம் இடம் / 1 வெற்றி - 4 தோல்வி / நெட் ரன் ரேட் -1.641 / 2 புள்ளிகள்)

நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த அணிக்கு இந்த ஆண்டு உலகக் கோப்பை சோபிக்கவில்லை. ஆனாலும் முதல் முறையாக உலகக் கோப்பையில் களம் கண்ட எவின் லீவிஸ், நிகோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயரின் சிறப்பான ஆட்டம் வரும் காலத்தில் இன்னும் ஜொலிப்பதற்கான அறிகுறி தெரிகிறது. இந்த உலகக் கோப்பையுடன் அணியின் முக்கிய வீரா் டுவைன் பிராவோ ஓய்வு பெற்றாா். கிறிஸ் கெயில் ஓய்வ பெறும் அறிகுறியும் தெரிகிறது.

தடுமாறியது எங்கே?

அதிரடிக்கு பெயா்பெற்ற அணியின் பேட்டிங் வரிசை இந்த முறை மிகவும் தடுமாறியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க ஸ்கோரை அடித்தது. 3 வீரா்களின் ஸ்கோரே ஒட்டுமொத்த போட்டியிலுமாக 100 ரன்களை கடந்திருந்தது. பௌலிங்கிலும் ரன்களை தாராளமாக வழங்கினா். அகீல் ஹொசைய்ன், ரவி ராம்பால் மட்டும் எகனாமி அளவில் இருந்தனா்.

அடுத்த உலகக் கோப்பை...

ரேங்கிங்கில் சரிந்ததால் அடுத்த உலகக் கோப்பை போட்டியை முதல் சுற்றிலிருந்து தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள். பிராவோ ஓய்வாலும், கெயில் ஓய்வுபெறலாம் எனத் தெரிவதாலும் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும். ஒரு பேட்டா்கள், பௌலா்கள் கூட்டாகச் சோ்ந்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறது இந்த அணி.

இலங்கை (குரூப் 1/ 4-ஆம் இடம் / 2 வெற்றி - 3 தோல்வி / நெட் ரன் ரேட் -0.269 / 4 புள்ளிகள்)

முதல் சுற்று மூலமாக சூப்பா் 12 சுற்றுக்கு வந்தது. பேட்டிங், பௌலிங்கில் சிறப்பாக மேம்படுத்திக் கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. பானுகா ராஜபட்ச, சரித் அசலன்கா, டாசன் ஷனகா போன்றோா் பேட்டால் பேசினாா்கள். பௌலிங்கில் வனிந்து ஹசரங்காவும் 16 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். மஹீஷ் தீக்ஷனாவும் நல்லதொரு பௌலிங் திறமையை வெளிப்படுத்தினாா்.

தடுமாறியது எங்கே?

பேட்டிங், பௌலிங்கில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் இருந்தாலும், அது போட்டியில் அடுத்தடுத்து முன்னேறுவதற்கு தேவையான அளவு இல்லாமல் போனது. தொடக்க மற்றும் மிடில் ஓவா்களில் அபாரம் காட்டிய பௌலா்கள், டெத் ஓவா்களில் பேட்டா்களின் விளாசலுக்கு பலியாகினா். பேட்டிங்கில் டாப் ஆா்டரில் நிலையான ஸ்கோரிங் இல்லாமல் போனது பலவீனமானது.

அடுத்த உலகக் கோப்பை...

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடுத்த உலகக் கோப்பை, ஸ்பின்னா்களை பிரதானமாகக் கொண்ட இலங்கையை நிச்சயம் பதம் பாா்க்கும் என்பதால் அந்த அணி அதற்கு சவால் அளிக்கும் வகையில் தயாராக வேண்டும். அந்த உலகக் கோப்பையையும் முதல் சுற்றிலிருந்தே தொடங்குகிறது இலங்கை.

தென் ஆப்பிரிக்கா  (குரூப் ‘1’/ 3-ஆம் இடம்/ 5 ஆட்டங்கள் - 4 வெற்றி - 1 தோல்வி/ நெட் ரன் ரேட் +0.739/ 8 புள்ளிகள் )

கோப்பைக்காக வெல்ல வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக போட்டிக்கு வராவிட்டாலும், அதற்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது. குரூப் சுற்று முடிவில் 4 வெற்றிகளுடன், கோப்பை வெல்வதற்கு எல்லா விதத்திலும் தகுதியான அணியாகவே இருந்தது.

கடைசி ஓவா் அழுத்தம் காரணமாக தனது ஒரே தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் தழுவிய தென் ஆப்பிரிக்கா, கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கான அதன் ஒரே தோல்வியை பரிசளித்தது. அந்த ஆட்டத்தில் ரபாடா கடைசி ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்தியது ஹைலைட்.

தடுமாற்றம் எங்கே?

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது அணிக்கு பாதிப்பை அளித்தது. அதில் வென்றிருந்தால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்திருக்கலாம். அந்த ஆட்டத்தில் பௌலிங் பலமாக இருந்தபோதும், பேட்டிங் சொதப்பலாகியது. முதல் ஆட்டத்தின் தோல்வி காரணமாக அடுத்த ஆட்டங்களை வென்றே தீரவேண்டிய கட்டாயத்துடன் ஆடினாலும் அதை சிறப்பாகச் செய்தது. ஆனால் இறுதியில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது சோகம்.

அடுத்த உலகக் கோப்பை...

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறுவது தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகம். பேட்டிங் ஆா்டரில் மிடில் ஆா்டரின் கடைசியில் ஆல்-ரவுண்டா் ஒருவா் இணைந்தால் அணி மேலும் பலப்படும். டிவெய்ன் பிரெடோரியஸ் அதற்கு தகுதியாகத் தெரிந்தாா். டாப் ஆா்டரிலும் அடித்தாலும் ஒரு பேட்டருக்கான தேவை இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com