நைம், ரஹீம் அரைசதத்தால் 171 ரன்கள் குவித்த வங்கதேசம்: ஜெயிக்குமா இலங்கை?
By DIN | Published On : 24th October 2021 05:21 PM | Last Updated : 24th October 2021 05:38 PM | அ+அ அ- |

டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் இலங்கை, வங்கசே அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் படிப்படியாக ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். பவர் பிளேவின் கடைசி ஓவரில் லஹிரு குமார் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஷனாகாவிடம் கேட்ச் ஆனார் லிட்டன் தாஸ் (16).
இதையும் படிக்க | மோசமாக சண்டையிட்டுக்கொண்ட இலங்கை, வங்கதேச வீரர்கள்: இது மட்டும் மாறவே இல்லை!
அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன், நயின் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், மீண்டும் ரன் ரேட் சற்று உயரத் தொடங்கியது. ஆனால், 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த நிலையில், ஷகிப் அல் ஹசன் 10 ரன்களுக்கு சமிகா கருணாரத்னே பந்தில் போல்டானார்.
10 ஓவர் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, நைம், முஷ்பிகுர் ரஹீம் இணை ரன் ரேட்டை உயர்த்தத் தொடங்கியது. குறிப்பாக ரஹீம் அவ்வப்போது பவுண்டரிகள் விரட்டி இலங்கைப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளித்தார்.
இதனிடையே நைம் 44-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். இதனால், வங்கதேச ரன் ரேட் ஓவருக்கு 8-ஐ தாண்டத் தொடங்கியது.
கடைசி நேரத்தில் அதிரடி காட்ட வேண்டிய தருணத்தில் நைம் 62 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும், ரஹீம் மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
பின்னர், 19-ஓவரில் களமிறங்கிய கேப்டன் மஹமதுல்லாவும், ரஹீமும் வங்கதேசத்துக்கு சிறப்பான பினிஷிங்கைத் தந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹீம் 37 பந்துகளில் 57 ரன்களும், மஹமதுல்லா 5 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் சமிகா கருணாரத்னே, பினுரா பெர்னான்டோ, லஹிரு குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.