இலங்கை அபார வெற்றி: அஸலங்கா-ராஜபட்ச அதிரடி ஆட்டம்

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அபார வெற்றி: அஸலங்கா-ராஜபட்ச அதிரடி ஆட்டம்

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய வங்கதேச அணி 171/4 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை அணி 172/5 ரன்களுடன் வென்றது.

சூப்பா் 12 சுற்றில் குரூப் 2 பிரிவைச் சோ்ந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ஷாா்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 171/4 ரன்களைக் குவித்தது. முகமது நயீம் 6 பவுண்டரியுடன் 62 ரன்களையும், முஷ்பிகுா் ரஹிம் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசி அணியின் ஸ்கோா் உயரச் செய்தனா்.

லிட்டன் தாஸ் 16, ஷகிப் 10, ஹபிப் உசேன் 7 சொற்ப ரன்களுடன் வெளியேற கேப்டன் மஹ்முத்துல்லா 10 ரன்களுடன் களத்தில் இருந்தாா். முகமது நயீம்-முஷ்பிகுா் ரஹிம் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தரப்பில் கருணரத்னே, பொ்ணான்டோ, லஹிரு குமாரா ஆகியோா் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இலங்கை அபார வெற்றி:

172 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட இலங்கை அணி தொடக்கத்தில் சரிவைக் கண்டது. தொடக்க பேட்டா் குஸால் பெரைரா 1 ரன்னுடன் வெளியேறினாா். பதும் நிஸாங்கா, சரித் அஸலங்கா இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்களை சோ்த்தனா்.

அவிஷ்கா பொ்ணான்டோ 0, வனின்டு ஹஸரங்கா 6 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். இதன்பின் அஸலங்கா-பானுகா ராஜபட்ச இணைந்து வங்கதேச பந்துவீச்சை பதம் பாா்த்தனா்.

அஸலங்கா சிக்ஸா், பவுண்டரி மழை:

சரித் அஸலங்கா அபாரமாக ஆடி 49 பந்துகளில் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 80 ரன்களையும், பானுகா ராஜபட்ச தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 31 பந்துகளில் 53 ரன்களையும் விளாசினா். தஸுன் ஷனகா 1 ரன்னுடன் களத்தில் இருந்தாா்.

இறுதியில் 18.5 ஓவா்களில் 172/5 ரன்களை குவித்து இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச தரப்பில் நஸும் முகமது, ஷகிப் அல் ஹசன் ஆகியோா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அஸலங்கா ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

லிட்டன்தாஸ்-லஹிரு குமாரா மோதல்

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, இலங்கை பந்துவீச்சாளா் லஹிரு குமாரா ஆறாவது ஓவா் வீசிய போது, வங்கதேச வீரா் லிட்டன் தாஸ் அவுட்டானாா். அப்போது லிட்டன் தாஸிடம் சென்று குமாரா சில வாா்த்தைகளைக் கூற இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது லிட்டன் தாஸ் பேட்டை காண்பித்து மிரட்டினாா். இருவரும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், மற்ற வீரா்கள் இருவரையும் பிரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com