ஆசிப் அலி: 2 வயது மகளைப் பறிகொடுத்தது முதல் 4 சிக்ஸர்கள் வரை!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆசிப் அலி தேர்வானபோது பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
ஆசிப் அலி: 2 வயது மகளைப் பறிகொடுத்தது முதல் 4 சிக்ஸர்கள் வரை!

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆசிப் அலி தேர்வானார். அந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியாத தருணமாக அது இருந்தது. ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். என் மகள் நான்காம் நிலை புற்றுநோயால் அவதிப்படுகிறார் என ட்விட்டரில் தெரிவித்தார். அவருடைய மகள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். 

மகள் இறந்தபோது உலகக் கோப்பையில் விளையாடுவேன் என உறுதி அளித்தார் ஆசிப் அலி. அந்த உலகக் கோப்பையில் இரு ஆட்டங்களில் விளையாடினார். கடினமான கால்கட்டங்களிலும் ஆசிப் அலியால் கிரிக்கெட்டை மறக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்காகத் தன்னுடைய திறமையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என காத்துக்கொண்டிருந்தார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆசிப் அலி தேர்வானபோது பலரும் கேள்வி எழுப்பினார்கள். வேறு ஆளே இல்லையா என விமர்சனங்கள் எழுந்தன. 

சமீபகாலமாக பலமுறை பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ஆசிப் அலி. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஆசிப் அலி, செப்டம்பர் மாதம் மீண்டும் சேர்க்கப்பட்டு அப்படியே டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். இதனால் ஆசிப் அலியின் தேர்வு விமர்சனத்துக்கு ஆளானது. 29 டி20 ஆட்டங்களில் 16.38 ரன்கள் சராசரி, 123.74 ஸ்டிரைக் ரேட் இருப்பதால் அவருடைய தேர்வு தவறு எனப் பலர் வாதிட்டார்கள். பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் ஆட்டங்களிலும் டி20 லீக் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடினாலும் சர்வதேச அரங்கில் அந்தத் திறமையை ஆசிப் அலியால் மீட்டுக்கொண்டு வர முடியவில்லை. பாகிஸ்தானின் பொலார்ட், ரஸ்ஸல் ஆக மாறுவார் என எதிர்பார்த்தார்கள். ஏமாற்றமே கிடைத்தது. ஆசிப் அலியை அணியிலிருந்து நீக்கியும் அவருடைய இடத்துக்கு சரியான வீரர்கள் யாரும் கிடைக்காததால் ஆசிப் அலியையே டி20 உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்தது. பாகிஸ்தானின் சிறந்த அதிரடி வீரர். அவர் மீது நம்பிக்கை உண்டு எனக் கருத்து தெரிவித்தார் பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவர் முகமது வாசிம். 

சர்வதேச ஆட்டங்களுக்கான தரம் வேறு, ஆசிப் அலியால் அதில் சாதிக்க முடியாது என்கிற விமர்சனங்களை டி20 உலகக் கோப்பையில் தவிடுபொடியாக்கி விட்டார் ஆசிப் அலி. இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 19 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 7 சிக்ஸர்களை அடித்துள்ளார். செவ்வாய் இரவு நியூசிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். நேற்றிரவு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துள்ளார். 

12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் கரிம் ஜனத் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார் 30 வயது ஆசிப் அலி.  7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஆசிப் அலி, ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

இதையடுத்து ட்விட்டரில், வேறு ஏதாவது வேண்டுமா பாகிஸ்தான்? (பிஎஸ்எல்) இஸ்லாமாபாத் யுனைடெட் அணியினருக்கும் என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கும் நன்றி என்றார் ஆசிப் அலி. மேலும் புதிய சாதனையும் நிகழ்த்தியுள்ளார். முழுமையாக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர், ஆசிப் அலி. (இதற்கு முன்பு இந்தியாவின் தினேஷ் கார்த்திக், நிடாஹஸ் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.)

டி20 உலகக் கோப்பையில் ஆசிப் அலியின் வானவேடிக்கைகள் தொடரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com