'கிங்'.. 'கிங்'.. 'தி கிங் கோலி': பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் மிரட்டலான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
'கிங்'.. 'கிங்'.. 'தி கிங் கோலி': பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி!


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் மிரட்டலான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா, இந்த முறையும் பதற்றத்துடனே விளையாடினர். விளைவு இருவரும் தலா 4 ரன்களுக்கு வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சற்று துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நெருக்கடியை பாகிஸ்தான் பக்கம் திருப்ப முயற்சித்தார்.

ஆனால், ஹாரிஸ் ரௌஃப் வேகத்தில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததால், பவர் பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து திணறி வந்தது.

ஹார்திக் பாண்டியா களமிறங்குவார் என்று எதிர்பார்த்தபோது, இடதுகை பேட்ஸ்மேனான அக்சர் படேலை களமிறக்கியது இந்திய அணி. அடுத்தடுத்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவர்கள் என்பதால், நல்ல வியூகமாக இருந்தாலும், அக்சர் படேல் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, விராட் கோலி மற்றும் ஹார்திக் பாண்டியா நிதானம் காட்டி பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்த நிலையில், 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். அந்த ஓவரை பாண்டியா சிக்ஸருடன் தொடக்கி, சிக்ஸருடன் முடிக்க, கோலியும் நடுவில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால், இந்திய அணிக்கு இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

ஆட்டம் சற்று விறுவிறுப்பு அடையத் தொடங்கியது. கோலி, பாண்டியா இணை சற்று துரித ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன.

அடுத்த 2 ஓவர்களை ஹாரிஸ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா சிறப்பாக, கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

ஷஹீன் அப்ரிடி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி அரைசதத்தை எட்டினார். மேற்கொண்டு இரண்டு பவுண்டரிகளையும் கோலி விளாச அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தன.

கோலி அசத்தல்:

19-வது ஓவரை ஹாரிஸ் ரௌஃப் வீசினார். முதல் 4 பந்துகளில் அவர் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்ததால், நெருக்கடி இந்திய அணி பக்கமே இருந்தது.

ஆனால், விராட் கோலி கடைசி 2 பந்துகளை 2 மிரட்டலான சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு, மீண்டும் இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள்:

முதல் பந்திலேயே ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார்.

கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட விராட் கோலி களத்தில் இருந்தார். 3-வது பந்தில் 2 ரன்கள் கிடைக்க, கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டன.

4-வது பந்தை கோலி சிக்ஸருக்கு பறக்கவிட, நோ பால் கேட்கப்பட்டது. அதுவும் நோ பால் வழங்கப்பட்டதால், ஃபீர் ஹிட் மற்றும் ஒரு பந்து கூடுதலாக கிடைத்தது இந்திய அணிக்கு. அடுத்த பந்து வைடாக வீசப்பட 1 ரன் மற்றும் மற்றொரு ஃபீர் ஹிட் கிடைத்தது. 

அந்த பந்து போல்டாக, ஃபீரி ஹிட் என்பதால் விக்கெட் இல்லை. அதேசமயம், கோலி மற்றும் கார்த்திக் 3 ரன்கள் ஓடி எடுத்தனர்.

இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டன. தினேஷ் கார்த்திக் ஸ்வீப் ஷாட் ஆட முயற்சித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, களத்திலிருந்த அஸ்வினின் சாமர்த்தியத்தால் நவாஸ் அதை வைடாக வீசினார். அடுத்த பந்தையும் அஸ்வின் தூக்கி அடித்து வெற்றி இலக்கை அடையச் செய்தார்.

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com