டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்களே எடுத்தாலும், வங்கதேசத்தை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் சாய்த்து 109 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெற்றியை நெருங்கி, பின் வாய்ப்பை தவறவிட்டது வங்கதேசம்.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 0, குவின்டன் டி காக் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 18 ரன்களுக்கு வீழ்ந்தனர். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னுக்கு நடையைக்கட்ட, 23 ரன்களுக்கே 4 விக்கெட்டுகள் பறிபோனது.
பின்னர் ஹென்ரிக் கிளாசென் - டேவிட் மில்லர் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயர்த்தியது. 5-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பில் கிளாசென் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, மில்லர் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஓவர்கள் முடிவில் மார்கோ யான்சென் 5, கேசவ் மஹராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச தரப்பில் தன்ஸிம் 3, தஸ்கின் 2, ரிஷத் ஹுசைன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் வங்கதேசம் 114 ரன்களை நோக்கி விளையாடுகையில், தன்ஸித் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 9, லிட்டன் தாஸ் 1 பவுண்டரியுடன் 9, ஷகிப் அல் ஹசன் 3, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு அடுத்தடுத்து சரிந்தனர்.
5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தௌஹித் ஹிருதய்- மஹ்முதுல்லா கூட்டணி, 44 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இதில் ஹிருதய் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்களுக்கு வீழ்ந்தார்.
இதனால் வங்கதேசம் ஆட்டம் காண, 11 ரன்கள் தேவையிருந்த கடைசி ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. ஜாகர் அலி 8, மஹ்முதுல்லா 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேற்றப்பட, வங்கதேசம் தடுமாறி வீழ்ந்தது.
ஓவர்கள் முடிவில் ரிஷத் ஹுசைன் 0, தஸ்கின் அகமது 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜ் 3, ககிசோ ரபாடா, அன்ரிஹ் நோர்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.