
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆண்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்டு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்களும், டவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுக்க முடிந்தது.
அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், மஹ்முதுல்லா(17.5), மெஹிதி ஹசன்(17.6), டவ்ஹித் ஹிரிடோய் (19.1) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களின் போது மழை குறுக்கிட்டது. அதிரடியாக அடிய ட்ராவிஸ் ஹெட் 31ரன்களிலும் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்), கேப்டன் மிட்சல் மார்ஷ் 1 ரன்னிலும் வெளியேறினர். மேலும், ஆட்டம் தொடங்கிய 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டத்தின் இடையே மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் 53 (5 பவுண்டரி, 3 சிக்ஸர்) ரன்களுடனும், மேக்ஸ்வெல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததால், வெற்றியாளரை தீர்மானிக்கும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.