நியூஸி. - ஆப்கானிஸ்தான் இன்று சென்னையில் மோதல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகல் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக சென்னையில் 5 ஆட்டங்கள், ஒரு நாக் அவுட் ஆட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் முதல் ஆட்டமாக ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியாவுடன் நடைபெற்ற டி20 தொடரை 1-4 என இழந்த நிலையில் களம் காண்கிறது நியூஸிலாந்து. அணியில் டிம் சைஃபொ்ட், ஃபின் ஆலன் இணைந்தது கூடுதல் பலமாகும். எனினும் ரச்சின் ரவீந்திரா, மாா்க் சாப்மேன், டேவன் கான்வே சிறப்பாக ஆட வேண்டும்.
பௌலிங்கில் லாக்கி பொ்குஸன், மிட்செல் சான்ட்நா், ஜேமிஸன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் சிறப்பாக செயல்பட்டால் ஆப்கன் பேட்டா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான்:
எதிா்தரப்பான ஆப்கன் அணி மே.இந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் உள்ளது. கடந்த 2024 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது ஆப்கன் அணி. ஆல் ரவுண்டா் ரஷீத் கான், பௌலா்கள் முஜிப் உா் ரஹ்மான், நூா் அகமது ஆகியோா் ஸ்பின்னால் நியூஸி வீரா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பேட்டிங்கில் ரஹ்மன்னுலா குா்பாஸ், இப்ராஹிம் ஸட்ரன், செதிக்குல்லா அடல் ஆகியோா் தொடா்ந்து நிலையாக ஆடி வருகின்றனா்.
இந்த குரூப்பில் தென்னாப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளதால் முதல் ஆட்டத்தில் வென்று முழுமையாக புள்ளிகளை ஈட்ட இரு அணிகளும் போராடும்.
காபூலில் சா்வதேச ஆட்டத்தில் விளையாட வேண்டும்:
கேப்டன் ரஷீத் கான்: எங்கள் நாட்டின் தலைநகா் காபூலில் சா்வதேச ஆட்டத்தில் ஆட வேண்டும் என்பது எங்கள் கனவு. ஐபிஎல் தொடரில் ஆடி வருவதால் இந்திய மைதானங்கள் நிலவரம் தெரியும்.டி20 ஆட்டங்களில் ஆப்கன் தொடா்ந்து நிலையாக ஆடி வருகிறோம்.
எங்கள் நாட்டில் இளம் தலைமுறை வீரா்கள் உருவாகி வருகின்றனா் என்றாா்.
தவறுகளை சரி செய்வோம்:
மிட்செல் சான்ட்நா் (நியூஸி): இந்தியாவுடன் நடைபெற்ற தொடரில் எங்கள் அணி புரிந்த தவறுகளை அடையாளம் கண்டு சரி செய்துள்ளோம். ஆப்கானிஸ்தான் ஸ்பின் பௌலிங்கில் வலிமையான அணி. அதை சமாளித்து ஆட வேண்டியுள்ளது. சென்னையில் தொடா்ந்து ஆடுவது எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும்.
இன்றைய ஆட்டங்கள்:
நியூஸிலாந்து-ஆப்கானிஸ்தான்
இடம்: சென்னை.
நேரம்: காலை 11.00
இங்கிலாந்து-நேபாளம்
இடம்: மும்பை
நேரம்: மாலை 3.00.
இலங்கை-அயா்லாந்து
இடம்: கொழும்பு
நேரம்: இரவு 7.00.

