சென்னை, ஆக. 30: அயனாவரம் அருகே பனந்தோப்பு ரயில்வே ஊழியர் குடியிருப்பு இப்போது அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எழும்பூர், வண்ணாரப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், பெரம்பூர், தாம்பரம், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அயனாவரத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கென பிரத்தியேகமாக கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு "பனந்தோப்பு காலனி' எனப்படுகிறது.
இதில் ரயில்வே ஊழியர்களின் வருவாய்ப் பிரிவின்படி (4 வகையான) வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் இயக்கம், மெக்கானிக்கல், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்களுக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
ரயில்வே ஊழியர்களுக்கு பணித் தகுதி அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் அவர்கள் கோரும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
இதற்கான வாடகைத் தொகை, ஊழியர்களின் ஊதியத்தில் 30 சதவீதமாக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது.
கூடுதல் வருவாய்க்கு...இவ்வாறு ரயில்வே ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை சிலர் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை முன் பணம் பெற்றுக் கொண்டு, "மேல் வாடகைக்கு' ரயில்வே ஊழியர்கள் அல்லாத "அன்னியர்களுக்கு' விடுகின்றனர்.
ஆரம்பத்தில் இக் குடியிருப்பில் உள்ள 3, 4, 5-வது தெருக்களில் மட்டுமே "அன்னியர்கள்' சிலர் குடியேறினர்.
இதற்கு ரயில்வே ஊழியர்கள் சிலரும் உடந்தையாக உள்ளது தெரியவந்துள்ளது.
இக்குடியிருப்பில் உள்ள பெரும்பாலான வீடுகள் போதிய பாரமரிப்பு இல்லாததால் சேதமுற்றுள்ளன. இப்படி குடியேறத் தகுதியற்றவையாக பட்டியலிடப்பட்ட வீடுகளிலும் அன்னியர்கள் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது,
அதிக தொகை முன்பணமாகக் கிடைப்பதாலும், மாதந்தோறும் தங்களிடம் ரயில்வே நிர்வாகம் வசூலிக்கும் வாடகையைவிட கூடுதலாக "அன்னியர்களிடம்' இருந்து மாதந்தோறும் மேல் வாடகை பெறுவதாலும் இத்தகைய மோசடியில் ரயில்வே ஊழியர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பில் சிக்கிய வீடுகள்...இதன் காரணமாக இப்போது இக் குடியிருப்பில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் அன்னியர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த வீடுகளை சிலர் சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் போலீஸôரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விதிமுறைகளின்படி இக் குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒதுக்குமாறு கோரி ஏற்கெனவே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
ஆனால், இடைத் தரகர்கள் சிலரின் உதவியுடன் அன்னியர்கள் சிலர் எளிதில் இக் குடியிருப்பில் உள்ள வீடுகளைக் கைப்பற்றுவது ரயில்வே ஊழியர்கள், அலுவலர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ரயில்வே கண்காணிப்பு அதிகாரிகள் சில நேரங்களில் எடுக்கும் நடவடிக்கையும் "கண்துடைப்பாக' உள்ளதால், "பனந்தோப்பு காலனி' வீடுகள் ரயில்வே ஊழியர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.