மேல்நிலைப் பள்ளி: தொழிற்கல்வியில் 9 பாடப்பிரிவுகள்! 45 பாடப்பிரிவுகள் நீக்கம்

சென்னை, ஜூலை 30:  வரும் 2010-2011 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் (பிளஸ் 1, பிளஸ் 2) தொழிற்கல்வியில் 9 பாடப் பிரிவுகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.   இந்தப்
Updated on
2 min read

சென்னை, ஜூலை 30:  வரும் 2010-2011 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் (பிளஸ் 1, பிளஸ் 2) தொழிற்கல்வியில் 9 பாடப் பிரிவுகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

  இந்தப் பாடப் பிரிவுக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

  தமிழகத்தில் சுமார் 1,697 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வியில் 66 பாடப் பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வந்தன. இதில் பிளஸ் 1-ல் மாணவர் சேர்க்கையில்லாதப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மாணவரிடம் வரவேற்பு இல்லாததால் 66-ல் இருந்து 54 பாடப் பிரிவாகக் குறைக்கப்பட்டது.

தொழிற்கல்வி சீரமைப்பு:   இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை சீரமைத்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

  இதன் முதற்கட்டமாக 2010-2011 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய 9 பாடப் பிரிவுகள் மட்டுமே நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

45 பாடப்பிரிவுகள் நீக்கம்:   தற்போது தொழிற்கல்வியில் 54 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் யாரும் சேர ஆர்வம் காண்பிக்கவில்லை. இதையடுத்து, மாணவர்கள் சேர ஆர்வம் காண்பிக்காத 45 பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

   தொழிற்கல்வியில் முக்கியமான 9 பாடங்களை மட்டும் மேல்நிலைப் பள்ளிகளில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

9 பாடங்கள் என்னென்ன?   ஜெனரல் மெஷினிஸ்ட்; எலக்ட்ரிக்கல் டெக்னீசியன்; ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் பாகங்கள் மற்றும் ரேடியா மற்றும் டிவி பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல்; டிராட்ஸ்மேன்; நர்ஸிங்; ஆபிஸ் செக்ரட்டேரிஷிப்; ஹோம் சயின்ஸ்; சைல்டு கேர் மற்றும் நியூட்ரிஸன்; அக்ரிகல்சுரல் பிராக்டீசஸ் ஆகிய முக்கியப் பாடங்கள் தொழிற்கல்வியில் இடம் பெறுகின்றன.

"டேலி' கற்றுத் தரப்படும்:   "தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள கணக்கியல் தணிக்கை பாடப்பிரிவினை (அக்கவுன்ட்ஸ் அன்ட் ஆடிட்டிங்) பொதுப் பாடப்பிரிவிற்கு மாற்றம் செய்யவும், அலுவலக செயலாண்மை பாடப்பிரிவில் கணினி கணக்கியல் (கம்ப்யூட்டர் அக்கவுன்ட்ஸ்) டேலி என்ற பாடப்பிரிவினை தொடங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2010-ல் பிளஸ் 1-ல் அறிமுகம்:   "9 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளுக்கு பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் தயாரிக்க 9 தனிதனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 9 பாடப்பிரிவுகளுக்கும், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. அடுத்த 3 மாதத்தில் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டுவிடும்.

  அதன்பின்னர் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, 2010 மார்ச் மாதத்தில் அந்தந்த மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  முதற்கட்டமாக பிளஸ் 1 வகுப்புக்கும் மட்டும் இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப 9 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளையும், அந்தந்த மேல்நிலைப் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்படும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com