கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கருத்துக் கணிப்பும், வாக்குக் கணிப்பும்! யார் பெறுவார் அந்த அரியாசனம் - 23

15வது மக்களவைக்கான தேர்தலில் இன்றுடன் கடைசிக் கட்ட வாக்கெடுப்பும் முடிவடையும். அடுத்து, இரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு வாக்களிப்பு இயந்திரங்கள் என்னென்ன எதிர்பாராத திருப்பங்களைத் தர இருக்கின்றனவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:10 pm

விக்கிரமசிங்கன்

15வது மக்களவைக்கான தேர்தலில் இன்றுடன் கடைசிக் கட்ட வாக்கெடுப்பும் முடிவடையும். அடுத்து, இரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு வாக்களிப்பு இயந்திரங்கள் என்னென்ன எதிர்பாராத திருப்பங்களைத் தர இருக்கின்றனவோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது என்றாலும், கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும், எல்லா ஜனநாயக நாடுகளிலும் தேர்தலில் ஒரு முக்கியமான பகுதியாக மாறிவிட்டது எனலாம். தேர்தல் வந்துவிட்டால் கூடவே ஒட்டிக் கொண்டு களத்தில் குதிப்பதுதான் கருத்துக் கணிப்புகள். இந்தக் கருத்துக் கணிப்புகள் மேலை நாடுகளிலும், வளர்ச்சி அடைந்த ஜனநாயகங்களிலும் மிகத் துல்லியமாக மக்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதுபோல, இந்தியாவில் தேர்தல் முடிவுகளை கணிக்க முடிவதில்லை என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை. ஒருசில தேர்தல் நேரக் கருத்துக் கணிப்புகள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாகப் பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தும் கருத்துத் திணிப்பாகவும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளின் ஆதரவுப் பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் ஏனோ தானோ சர்வேக்களை வெளியிட்டு வாக்காளர்களைக் குழப்ப முற்பட்டாலும், வாக்காளர்கள் இந்தக் கருத்துத் திணிப்புகளால் மயங்குவதில்லை என்பதையும் கடந்த பல தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. தேர்தலில் மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பது இரண்டு வகையாகக் கணிக்கப்படுகின்றன. தேர்தலுக்கு முன்னால் இருக்கும் மனநிலையை கணிப்பதுதான் கருத்துக் கணிப்பு எனப்படும் ஞல்ண்ய்ண்ர்ய் டர்ப்ப். வாக்களித்துவிட்ட வாக்குச் சாவடியிலிருந்து வெளிவரும் வாக்காளர்களைப் பேட்டி எடுத்து அதன் அடிப்படையில் முடிவுகளை கணிப்பது, வாக்குக் கணிப்பு எனப்படும் உஷ்ண்ற் டர்ப்ப். கருத்துக் கணிப்பைவிட, வாக்குக் கணிப்பு ஓரளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்பது தேர்தல் ஆய்வாளர்களின் கருத்து. முறையான விஞ்ஞான அடிப்படையில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டால், ஓரளவுக்கு சரியாக மக்களின் மன ஓட்டத்தை அறிய முடியும். ஆனால், இதற்காகும் செலவு மிக மிக அதிகம். விஞ்ஞான பூர்வமான தேர்தல் கணிப்பு நடத்தப்பட வேண்டுமானால், வாக்காளர்களில் ஒரு சதவிகிதத்தினரையாவது கருத்துக் கேட்டறிய வேண்டும். அந்த ஒரு சதவிகிதத்தினரையும் ஜாதிவாரியாகப் பிரித்து, நகர்ப்புறம், கிராமப்புறம், வருமானப் பிரிவுகள், சமவிகிதத்தில் ஆண், பெண் வாக்காளர்கள் என்று பல்வேறு பிரிவினரையும் உள்படுத்திக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். இதற்காகும் செலவும், உழைப்பும் மிகமிக அதிகம். பத்து மக்களவைத் தொகுதிக்கு, தொகுதிக்குப் பத்தாயிரம் வாக்காளர்கள் வீதம் முறையாகக் கருத்துக் கணிப்பு நடத்துவதாக இருந்தால் அதற்காகும் செலவு குறைந்தது ஒன்றரைக் கோடி ரூபாய். குறைந்தது 100 பேராவது ஒரு மாத காலம் இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட வேண்டும். நாடு தழுவிய விஞ்ஞான ரீதியிலான கருத்துக் கணிப்பை 543 தொகுதிகளில் நடத்த என்ன செலவாகும் என்று கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். பெயருக்கு சிலரிடம் ஆங்காங்கே கருத்துக் கணிப்பு நடத்திவிட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்புகளைக் கட்டவிழ்த்து விடுவதால், கணிப்புகள் பொய்த்து விடுவது மட்டுமல்லாமல், அதற்கு மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சில தேசியத் தொலைக்காட்சிச் சேனல்களும், ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிடும் கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் ஓரளவுக்குத் துல்லியமாகவே இருக்கின்றன. அதற்குக் காரணம், அந்தச் சேனல்களும் பத்திரிகைகளும் பரவலாக நிருபர்களைக் கொண்டிருப்பதுதான். கடந்த சில வருடங்களாக, வாக்காளர்களும் தங்களது கருத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பெரும்பான்மையான மக்கள், வாக்களித்த பின் உண்மைத் தகவலை சொல்லத் தயங்குவதாலும், வேண்டுமென்றே தவறான தகவலைத் தந்துவிடுவதாலும் வாக்குக் கணிப்பு முடிவுகள்கூட கேள்விக்குறியாகி விடுகிறது. ஆரம்பம் முதலே பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தக் கருத்துக் கணிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பம் முதலே கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக மாறி வருகின்றன என்கிற அபிப்பிராயத்தை முன் வைத்திருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுவதில்லை. பல்வேறு மாநிலங்களில் சில வார இடைவெளியில் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில் கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் வாக்காளர்களின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது அரசியல் கட்சிகளின் வாதம். ஒரு குறிப்பிட்ட கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என்று வாக்குக் கணிப்பு வெளியிடப்பட்டால், அந்த முடிவு அடுத்த கட்டத் தேர்தலில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் அவர்களது நியாயமான கவலை. கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்லாமல், எல்லா அரசியல் கட்சிகளுமே ஆரம்பத்தில் கருத்துக் கணிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தன. 1997 டிசம்பர் மாதம் தேர்தல் கமிஷன் இந்தப் பிரச்னையை விவாதிக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. கருத்துக் கணிப்புகள் விஞ்ஞான ரீதியாக இல்லை என்பதாலும், அதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியது என்பதாலும் தேர்தல் அறிவிப்பு வெளியானால் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கோரிக்கை. எல்லா மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த பிறகுதான் வாக்குக் கணிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் 1998 ஜனவரி மாதம் கருத்துக் கணிப்புகளுக்கு சில வரைமுறைகளை விதித்தது. ஆனால் இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சில பத்திரிகைகள் வழக்குத் தொடர்ந்தவுடன், தேர்தல் கமிஷன் தனது விதிமுறைகளை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. அரசியல் கட்டத்தில் 19(1)(அ) பிரிவின்படி, இந்தியக் குடிமகனுக்கு அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தைத் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் கட்டுப்படுத்தும் என்கிற வாதத்துக்கு முன்னால், கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கும் திட்டம் தோற்றுப் போனது.

தடுத்துப் பார்த்தும் முடியவில்லை என்று தெரிந்ததும் நமது அரசியல் கட்சிகள் தேர்தல் கணிப்புகளைத் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். தங்களுக்கு ஆதரவான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள் மூலம், கணிப்புகளை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் அவரவர் கட்சி வெற்றி முகத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம். முடிவுகள் வெளி வந்தால் சாயம் வெளுத்துவிடும் என்கிற கவலை அவர்களுக்கும் இல்லை. வாசகர்கள் மத்தியில் தங்கள் பெயரும் கெ ü ரவமும் குறைந்து விடுமே என்கிற கவலை பத்திரிகைகளுக்கும் இல்லை.

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. இந்திய வாக்காளர்கள், கருத்துக் கணிப்புகளில் மயங்கி வாக்களிக்கும் அளவுக்கு முட்டாள்களும் அல்ல. அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை நிர்ணயிப்பதும், கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் கருத்துக் கணிப்பு ஆய்வாளர்களைக் கலந்தாலோசித்து சில விதிமுறைகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். கருத்துக் கணிப்பு நடத்தும் அமைப்புகளும், பத்திரிகைகளும் விஞ்ஞான ரீதியில்தான் கணிப்புகளை நடத்துகின்றனவா என்பது தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, கருத்துக் கணிப்புகள் நடத்துவதற்கும், அதை வெளியிடுவதற்கும் சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் மட்டும்தான் கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக இல்லாமல் இருக்கும். கடைசிக் கட்டத் தேர்தலும் இன்றுடன் முடிந்துவிடும் நிலையில், பல்வேறு விஞ்ஞான ரீதியிலான வாக்குக் கணிப்புகள் என்ன கூறுகின்றன? யார் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கக் கூடும்? எந்த அணி முந்துகிறது? எந்த அணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது? எந்த அணியிலிருந்து எந்தக் கட்சி எந்த அணிக்குத் தாவக் கூடும் வாய்ப்பு காணப்படுகிறது? (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.