நூல்கள் உண்டு; கட்டடம் இல்லை
அரூர்: அரூர் அருகே ஓலைக் குடிசையில் தமிழக அரசின் ஊர்ப்புற நூலகம் இயங்குகிறது. நூல்கள் இருந்தாலும், அவற்றை படிப்பதற்கு தேவையான வசதி இல்லாததால் கிராமப்புற இளைஞர்கள் கட்டட வசதி கோரி வருகின்றனர். அரூர் ஒன


அரூர்: அரூர் அருகே ஓலைக் குடிசையில் தமிழக அரசின் ஊர்ப்புற நூலகம் இயங்குகிறது. நூல்கள் இருந்தாலும், அவற்றை படிப்பதற்கு தேவையான வசதி இல்லாததால் கிராமப்புற இளைஞர்கள் கட்டட வசதி கோரி வருகின்றனர்.
அரூர் ஒன்றியம், கொங்கவேம்பு ஊராட்சிக்குட்பட்டது எஸ்.பட்டி கிராமம். இங்கு 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த எஸ்.பட்டி கிராமத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் குடிசைத் தொழிலாக இருந்தது.
கிராமத்தில் அடிக்கடி சமூக மோதல்கள், தேவையற்ற தகராறுகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து 15 ஆண்டுகளாக அரூர் காவல் நிலையப் பட்டியலில் கரும்புள்ளி கிராமமாக எஸ்.பட்டி இருந்து வருகிறது.
இப்போது கிராமத்தில் படித்த இளைஞர்கள் தலையெடுத்ததை அடுத்து கள்ளச்சாராயம் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் இருப்பதால், அவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வசதியாகவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக ஊர்ப்புற நூலகம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து 21.05.2008-ல் தமிழ்நாடு அரசின் நூலகத் துறை சார்பில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது.
ஆனால் இதுவரை நூலகர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஊரைச் சேர்ந்த இளைஞர் தினக்கூலி அடிப்படையில் இப்பணியை செய்து வருகிறார்.
நூலகம் தொடங்குவதற்கு முன்பே 29.10.2007-ல் ஊர் பொதுமக்கள், மாவட்ட நூலக அலுவலகத்துக்கு 10 சென்ட் நிலம் பதிவு செய்துள்ளனர். இப்போது இந்த ஊர்ப்புற நூலகத்தில் 588 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். தலா ரூ.1000 நன்கொடை அளித்து 12 நூலக புரவலர்கள் இணைந்துள்ளனர்.
வீடு வீடாக மாறும் நூலகம்: தொடக்கத்தில் தனியார் ஒருவரது ஓட்டு வீட்டில் நூலகம் இயங்கத் தொடங்கியது. அதன் பிறகு 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த நூலகம் இடம் பெயர்ந்தது. ஊட்க்போது கூரை வீடு ஒன்றில் தாற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்த கூரை வீடு மழை நேரத்தில் பாதுகாப்பற்றதாக இருப்பதால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாழாகும் சூழல் நிலவுகிறது.
இளைஞர்கள் இந்த நூல்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள், கோணிப் பைகளைக் கொண்டு மூடி பாதுகாக்கின்றனர்.
நூலகத்துக்கு தேவையான இடம் இருந்தும், அதற்கான கட்டடம் கட்டாதது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பலமுறை முறையிட்டும் பயனில்லை என்று கிராமத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) பி.ராஜேந்திரன் கூறியது:
பகுதி நேர நூலகம், ஊர்ப்புற நூகம் தொடங்க 5 சென்ட் நிலம் வேண்டும். தலா ரூ.20 கட்டணம் செலுத்தி 200 உறுப்பினர்கள் சேர வேண்டும். தலா ரூ.ஆயிரம் நன்கொடை வழங்கி 2 நூலக புரவலர்கள், வாடகையில்லா கட்டடம், தளவாடங்கள் இருந்தால் நூலகம் அனுமதிக்கப்படுகிறது.
இப்போது அரூர் ஊதிய மையத்தின் கீழ், ஒரு பகுதி நேர நூலகமும், 16 ஊர்ப்புற நூலகங்களும் அமைந்துள்ளன. கட்டடம் கட்டுவதற்கு தேவையான நிதி நூலகத்துறையில் இல்லை.
அரூர் சட்டப் பேரவை உறுப்பினர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இவ்வாண்டு இறுதிக்குள் எஸ்.பட்டி ஊர்ப்புற நூலகம் கட்டட வசதி பெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...