

சென்னை, பிப்.19: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு சுமையில்லாத வகையில் இருக்கும்படியும், அவர்களை கவரும் வகையில் வண்ணமயமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடப் புத்தகங்கள் மூலம் 80 பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களிடம் கள ஆய்வு நடத்தப்பட்டது.
வரும் கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிக், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என நான்கு கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து "பொதுக் கல்வி வாரியம்' உருவாக்கப்பட்டது.
அதேபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப் புத்தகங்களை மாணவர்கள் படிக்கும் வகையில் "பொதுப் பாடத்திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது.
தேசிய கலைத்திட்டத்தை (என்சிஎப்) அடிப்படையாகக் கொண்டு முதல் மற்றும் 6}ம் வகுப்புக்கான பாடப்புத்தகம் எழுதும் பணி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மாநிலக் கல்வித் திட்டம் மற்றும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்ட ஆசிரியர்களுடன், கல்வியாளர்களும் இணைந்து வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்கினர். பின்னர் வரைவுப் பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன.
சுயமாகச் சிந்தித்து கற்கும் வகையில்...: "தற்போதுள்ள பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் வகையிலே உள்ளன. ஆனால் சமச்சீர் கல்விக்கு தயாராகி வரும் புத்தகங்கள் மாணவர்களை சுயமாகச் சிந்தித்து கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், வல்லுநர் குழு இரவு பகலாக உழைத்துள்ளது' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தகங்களில் பக்கங்கள் குறைப்பு...: சமச்சீர் கல்விக்கு தயாரிக்கப்பட்ட 6}ம் வகுப்பு புத்தகம், இப்போதுள்ள புத்தகத்தைக் காட்டிலும் மாணவர்களுக்கு பாடச் சுமையில்லாத வகையில் பக்கங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
தமிழில் முன்னர் 190 பக்கம் இருந்தது. தற்போது 140 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆங்கிலத்தில் 181 பக்கங்களாக இருந்த புத்தகம் 96 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கணிதம் புத்தகம் முன்னர் 230 பக்கங்களாக இருந்தது. இப்போது 160 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிவியல் புத்தகம் 196 பக்கங்களில் இருந்து 100 பக்கங்களாகவும், சமூக அறிவியல் புத்தகம் 235 பக்கங்களில் இருந்து 100 பக்கங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பாடச் சுமையைக் குறைக்கும் வகையில் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொருளடக்கம், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் வகையில் அ4 அளவில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
முதல் வகுப்பில் மாணவர்களுக்கு பிடித்தமான வகையில் புத்தகம் இருப்பதற்காக அதிகளவில் படங்களும், விளக்கங்களும், எழுத்து பயிற்சிக்கு என புத்தகத்தை வடிவமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் பார்வைக்கு: சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை எழுத்துப் பிழை மற்றும் சரிபார்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் பார்வைக்குப் புத்தகம் கொண்டு செல்லப்பட உள்ளது. இதையடுத்து, புத்தகம் அச்சடிக்கும் பணி மாத இறுதியில் தொடங்கும்' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
150 ஆசிரியர்கள்...
அதைத்தொடர்ந்து பாடத்திட்டம் ஒப்புதல் பெறப்பட்டு புத்தகங்கள் எழுத "பாட நூல் குழு' உருவாக்கப்பட்டது. சுமார் 150}க்கும் அதிகமான ஆசிரியர்களும், வல்லுநர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
80 பள்ளிகளில் கள ஆய்வு...
பாடப் புத்தகம் எழுதி முடித்த பிறகு தமிழகத்தில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 80 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பாட புத்தகங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பாடங்கள் நடத்தப்பட்டு சுமார் 3,000 மாணவர்களின் கருத்துக்களை அறிந்து ஆசிரியர்கள் அறிக்கை தயாரித்து அனுப்பி வைத்தனர்.
அதனடிப்படையில் பாடப் புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு ஆசிரியர் குழுவினர், துறை சார்ந்த கல்லூரி ஆசிரியர் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வண்ணமயமாக...
முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான அனைத்து புத்தகங்களின் பக்கங்களும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னை நுண்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.