ஊரகப் பகுதிகளில் இரவு நேரத்திலும் தொடரும் மின் வெட்டு

திருச்சி, மே. 2:  திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் அறிவிக்கப்படாத "இரவு நேர' மின் வெட்டு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.   தமிழகத்தில் மின் பயன்
Updated on
2 min read

திருச்சி, மே. 2:  திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் அறிவிக்கப்படாத "இரவு நேர' மின் வெட்டு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

  தமிழகத்தில் மின் பயன்பாட்டிற்காக தினந்தோறும் 10,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கோடைகாலத்தில் குளிர்சாதனக் கருவிகளின் அதிகப் பயன்பாடு காரணமாக மேலும், 300 முதல் 500 மெகாவாட் வரை கூடுதல் மின்சாரம் தினந்தோறும் தேவைப்படுகிறது.

  ஆனால், தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் 9,000 மெகாவாட்டுக்கும் குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  மேட்டூர் கதவணை உள்ளிட்ட நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தற்போது இல்லாதது, காற்றாலை மூலம் மின் உற்பத்தி இல்லாதது போன்ற காரணங்களால் குறிப்பிட்ட அளவுக்கு மேல், மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை தமிழகத்தில்

உள்ளது.

  தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிக்கும் மின் வெட்டின் அளவு இந்தாண்டு சற்று அதிகமாகவே இருக்கிறது.

  முதலில் 2 மணி நேரமாக இருந்த மின் வெட்டு மார்ச் மாத இறுதியில் 3 மணி நேரமாக அறிவிக்கப்பட்டது. இந்த 3 மணி நேர மின் வெட்டு என்பது நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல நாள்களில் 3 மணி நேரத்தைவிடக் கூடுதலாகவே மின் வெட்டு செய்யப்பட்டு வருகிறது.

  சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தப்படும் நேரத்தில் மட்டுமல்லாது, முன் அறிவிப்பு இல்லாமல் பல நேரங்களில் மின் வெட்டும் செய்யப்பட்டு வருவது கடந்த ஒரு மாதமாக நிகழ்ந்து வருகிறது.

  நகர்ப் பகுதிகளில் இந்த நிலை என்றால், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரம் என்பதைவிடக் கூடுதலாகவே தினமும் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

  இந்நிலையில், கடந்த சில நாள்களாக புறநகர்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக 5 முதல் 6 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது.

  பகலில் இந்த நிலை தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலில் இரவு நேரங்களில் குறைந்தது ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது.

  மத்தியத் தொகுப்பின் "தால்ச்சர்' யூனிட்டிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவு குறைந்துள்ளதாலும், நெய்வேலி, வட சென்னை அனல் மின் நிலையங்களின் சில யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள கோளாறுகளுமே இதற்குக் காரணம் என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ஏற்கெனவே வழக்கத்தைக் காட்டிலும் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  சிறியவர் முதல் பெரியவர் வரை இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதி உள்ளவர்கள் "இன்வெர்ட்டரை' பயன்படுத்துவதால் அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இரவு நேரத் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.   தற்போதே மின்வெட்டைச் சமாளிக்க முடியவில்லை. இனி வரவிருக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என புலம்புகின்றனர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com