சென்னை, ஏப். 22: புதிய ரேஷன் அட்டைகளை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எழுதிய கடிதத்தை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்படவில்லை. அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். மேலும், புதிய ரேஷன் அட்டைகளை அளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும்வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது. அதாவது, மே 15 வரை ரேஷன் அட்டைகளை அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் ரேஷன் அட்டை கேட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் மனுக்கள் தேர்தல் நடத்தை விதிகளால் தேங்கியுள்ளன. பல விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் தயாராக இருந்த நிலையிலும் தேர்தல் ஆணையத்தின் தடையால் அவற்றை கொடுக்க முடியாத சூழல் உள்ளது.
கடிதத்தை ஏற்க முடியாது: புதிய ரேஷன் அட்டைகளை வழங்கும் பிரச்னைக்குத் தீர்வு காண, உணவுத் துறையிடம் இருந்து அனுமதி கேட்டு கடிதம் வரப்பெற்றால் அது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த செய்தி "தினமணி'யில் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
உணவுப் பொருள் வழங்கல் துறையின் ஆணையாளர் கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய ரேஷன் அட்டைகளை வழங்கக் கோரி உணவுத் துறையின் செயலாளர் மட்டுமே கடிதம் எழுத முடியும். அந்தக் கடிதமும் நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப முடியாது. தலைமைச் செயலாளர் வழியாக அந்தக் கடிதம் வரப்பெற வேண்டும். அப்படி முறையாக கடிதம் வரும் பட்சத்தில் மட்டுமே புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்கிறது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.