பொன்னேரி, டிச. 1: சீமாவரம் பகுதியில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக விடுத்து வரும் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாததால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர், சோழவரம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சீமாவரம், மடியூர், தன்ரான் பாளையம், பெரிய முல்லைவாயல், கொடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், ஞாயிறு, வழுதிகைமேடு, திருநிலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்களில் வசித்து வரும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை வாங்க காரனோடை, செங்குன்றம், சோழவரம், மூலக்கடை, மீஞ்சூர் ஆகிய ஊரிகளுக்குத் தான் செல்ல வேண்டும். அதே போன்று இப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களும் மேற்கண்ட ஊர்களுக்கு வந்து செல்ல வேண்டும்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூலக்கடை, சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அரசு பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள மீஞ்சூருக்குச் செல்ல வேண்டும் என்றால் சீமாவரம் பகுதியில் உள்ள குசஸ்தலை ஆற்றை கடந்துதான் சென்று வரவேண்டும். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத நாள்களில் இப்பகுதி மக்கள் எளிதாக ஆற்றை கடந்து மீஞ்சூர் சென்று வருவர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றை கடந்து செல்ல 10 கி.மீ. தூரம் சுற்றி நாப்பாளையம் வழியாக மீஞ்சூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆற்றை கடந்து செல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு சீமாவரம் பகுதியில் அரசு சார்பில் படகு இயக்கப்பட்டது. சீமாவரம், மடியூர், வழுதிகைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல சீமாவரம் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் அங்கு இன்னமும் பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி மீஞ்சூரில் உள்ள குசஸ்தலை ஆற்றின் குறுக்கே சீமாவரம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


