திருப்பூரில் பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர்கள்!

திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் திருப்பூரில், அதற்கு இணையாக சமூக பாதிப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக குழந்தைத்
திருப்பூரில் பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர்கள்!
Updated on
2 min read

திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் திருப்பூரில், அதற்கு இணையாக சமூக பாதிப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன. குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் முறை தீர்க்க முடியாத பிரச்னையாகவே மாறியுள்ளது.

வறுமை காரணமாக பெற்றோரே குழந்தைகளை திருப்பூர் தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் சூழல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் நடத்திய தீவிர நடவடிக்கையால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2010 ஜூன் முதல் 2011 ஜூன் வரை 280 குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், திருப்பூரின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இயங்கும் நூற்பாலைகள் உள்ளிட்டவற்றில் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்வதனை, அண்மையில் அவிநாசி அருகே 9 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்துகிறது.இதனிடையே, பள்ளி செல்லப் பிடிக்காமல் பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்து சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி, திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்களாகி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

அவ்வாறு, திருப்பூர் வரும் சிறுவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுவதால், பொது இடங்களில் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், புறநகரில் உள்ள ஹோட்டல்களில் உணவு பரிமாறும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இது போன்று பாதிக்கப்பட்டு, திருப்பூரில் குப்பை பொறுக்கி விற்கும், பெரம்பலூர் சிறுவர்கள் சண்முகம் (16), மோகன் (14) ஆகியோர் கூறியது: குடும்ப வறுமையில் தவிக்கும் பெற்றோரால் தொடர்ந்து எங்களைப் படிக்க வைக்கவும், கவனிக்கவும் முடியவில்லை. 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்தோம். நாள் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில், அட்டைகள் என தரம்வாரியாக குப்பைகள் பொறுக்கி விற்றால் சுமார் ரூ. 200 வருவாய் கிடைக்கிறது என்றனர்.

வீட்டைவிட்டு வெளியேறி திருப்பூர் வரும் சிறுவர்களை "சேவ்' தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கிறது. கடந்த 2010ம் ஆண்டில் 5 சிறுமிகள் உள்பட 65 சிறுவர்களும், 2011ல் நம்பர் 31ம் தேதி வரை 15 சிறுமிகள் உள்பட 62 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், கடந்த ஆண்டு 59 சிறுவர்களும், இவ்வாண்டு இதுவரை 36 சிறுவர்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறுவர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சேவ் அமைப்பின் இயக்குநர் ஆ.அலோசியஸ் கூறியது:

வறுமை, படிப்பில் வெறுப்பு, பெற்றோரிடையே தகராறு, பெற்றோர் இல்லாதது, ஆசிரியர்களின் கண்டிப்பு, பள்ளியில் காணப்படும் ஏற்றத் தாழ்வு போன்ற பல காரணங்களால், சிறுவர்கள் பள்ளியைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பெரும்பாலும் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளாததே இதற்கு காரணமாகிறது.

வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்கள் எதிர்காலத்தில் சமூகவிரோதிகளாக மாறக் கூடும். இந்நிலையைத் தடுக்க, குழந்தைகளின் மனநிலையை அறிய, பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து குழந்தைகள், பெற்றோருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார்.

மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே குழந்தை தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com