

சென்னை, ஜன.8: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவதில் பிரச்னைகள் ஏற்பட்டால் போராட தயங்க மாட்டோம் என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை (தொ.மு.ச.) தலைவர் செ.குப்புசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊதிய முரண்பாடுகளை முழுமையாகக் களைய நிர்வாகங்கள் மேலும் ஒருவார கால அவகாசம் கேட்டுள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை களைந்து, பின்னர் பலன்கள் வழங்கப்பட வேண்டும்.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி (2642 புள்ளிக்குச் சமன் செய்து 48.5 சதவீதம் வழங்கவும்), வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உள்ளிட்டவைகள் குறித்தும், மின் வாரியத்துக்கு இணையான ஊதிய நிலைகளை கொண்டுவர தொடர்ந்து பேசி வருகிறோம்.
இதற்கிடையில் காலதாமதத்தைத் தவிர்க்கவும், பொங்கலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையில் முன் பணமாக ரூ. 7,000 ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பெற்றுத் தருவதென முடிவு எடுத்துள்ளோம்.
ஊதிய விகிதம், இதர பிரச்னைகள் குறித்து பேசி முடிக்க போக்குவரத்து நிர்வாகம், நிதித்துறை, தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் அடங்கிய குழு அமர்ந்து பேசி 25.1.2011-க்குள் ஒப்பந்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. ஒப்பந்தம் ஏற்படுவதில் பிரச்னைகள் இருந்தால், போராடுவதற்கு தொ.மு.ச. தயங்காது என்றும் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.