

திருவொற்றியூர், ஜன. 8: சென்னைத் துறைமுகத்தின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினர்.
மோசமான சாலைகள், லாரிகள் நிறுத்திவைக்கும் இடம், நுழைவு வாயில்கள் போன்றவற்றின் குறைபாடுகள் காரணமாக சென்னைத் துறைமுகத்திலும் அதனை ஒட்டிய ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நீண்ட நாள்களாக நிலவி வருகிறது.
பல்வேறு வேலை நிறுத்தங்களால் கடந்த நவம்பர் மாதம் முதல் கடும் நெருக்கடியை சென்னைத் துறைமுகம் சந்தித்து வருகிறது. இப்போது துறைமுகத்தின் உள்ளே சுமார் 24 ஆயிரம் கன்டெய்னர்கள் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில நாள்கள் இதே நிலை நீடித்தால் சென்னைத் துறைமுகம் முற்றிலும் முடங்கிவிடும் அபாயமும், இதன் மூலம் தொழில்துறையில் கடும் நெருக்கடியும் ஏற்படும் நிலை உருவாகியது.
இந்நிலையில் இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மாலதி உத்தரவிட்டார்.
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், நகராட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, சுங்கத்துறை கூடுதல் ஆணையர் பிரகாஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையர் தரேஷ் அகமது மற்றும் சுங்கத் துறை, போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் சென்னைத் துறைமுகத்திலிருந்து திருவொற்றியூர் வரை நுழைவு வாயில்கள், நிறுத்துமிடங்கள், வரிசையில் காத்திருந்த லாரிகள், மோசமான நிலையில் உள்ள சாலைகள் என பல்வேறு இடங்களைப் பார்வையிட்டனர்.
மேலும் திருவொற்றியூர் நகராட்சிக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 15 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி லாரிகள் நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது அமைவதன் மூலம் சாலைகளை ஆக்கிரமித்து வரிசையில் காத்திருக்கும் சுமார் 700 கன்டெய்னர் லாரிகள்வரை இதன் உள்ளே நிறுத்தி வைக்க முடியும் என அதிகாரிகள் விளக்கினர். இத்திட்டத்தை உடனே செயல்படுத்துவது என அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கள ஆய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் ஜனவரி 12-ல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சென்னைத் துறைமுக போக்குவரத்து நெருக்கடிக்கு இறுதித் தீர்வு காணப்படும் என துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.