சென்னை, ஜன. 17: தமிழக வாசகர்கள், படைப்பாளிகள், பதிப்பாளர்கள் யாவரும் கடந்த 14 நாள்களாக ஒரு சேர கொண்டாடிய சென்னைப் புத்தகக் காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இந்தப் புத்தகக் காட்சிக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் வந்தனர்; 25 லட்சம் புத்தகங்கள் விற்றன; புத்தகக் காட்சியின் சந்தை மதிப்பு ரூ. 7.5 கோடியைத் தாண்டியது. கடந்த 34 ஆண்டு கால சென்னைப் புத்தகக் காட்சி வரலாற்றில் எல்லாவிதத்திலும் இதுவே உச்சமாகும்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 34-வது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. ஏறத்தாழ 1.76 லட்சம் சதுர அடி அளவில் 646 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட இந்தப் புத்தகக் காட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடி புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டில் பொங்கல் விடுமுறை நாள்களை அனுசரித்து 14 நாள்களுக்கு புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. 6 நாள்கள் இந்த முறை விடுமுறை நாள்களாக அமைந்தன.
இதனால், இந்த ஆண்டு அதிகமான வாசகர்கள் வருகையையும் புத்தக விற்பனையையும் பதிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விடுமுறை நாள்களில் காலை 11 மணிக்கே புத்தகக் காட்சியைத் தொடங்கியும்கூட பல நாள்கள் காட்சி நேரமான இரவு 8.30 மணியைக் கடந்தும் மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. இதனால், மேலும் அரை மணி நேரம் கூடுதல் நேரமாக அறிவிக்கப்பட்டு, அதையும் தாண்டி மேலும் அரை மணி நேரம் விற்பனை நடைபெறும் அளவுக்கு பிரமாண்டமான மக்கள் கூட்டம் திரண்டது.
குழந்தைகள் பங்கேற்பு: இந்தப் புத்தகக் காட்சியில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் குழந்தைகளின் பங்கேற்பு. கல்வி நிறுவனங்கள் சார்பில் அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகளும், குடும்பத்தாருடன் வந்த பிள்ளைகளும், புத்தகங்களை வாங்கிக் குவித்தனர்.
குழந்தைகளுக்கான புத்தகங்கள், டிவிடிக்கள், சிடிக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, குறைந்த விலையில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்கும் அரசு சார் நிறுவனமான "நேஷனல் புக் டிரஸ்ட்' அரங்கில் புத்தகங்கள் கட்டுக்கட்டாக வந்த வண்ணமும் விற்றுத் தீர்ந்த வண்ணமும் இருந்தன.
எல்லோருமே வாங்கினர்: புத்தகக் காட்சிக்கு வந்த ஒவ்வொரு வாசகரும் குறைந்தது சில புத்தகங்களையேனும் வாங்கிச் சென்றனர். வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களும்கூட ""இனியேனும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று கூறியவாறே புத்தகங்களை வாங்கிச் சென்றனர். மிகச் சிலரே வெறுங்கையோடு திரும்பினர்.
புதிய நம்பிக்கை: இந்தப் புத்தகக் காட்சி புதிய நம்பிக்கைகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி இருப்பதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர். புத்தகக் காட்சியை நடத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் இதுகுறித்து கூறுகையில், ""நிச்சயமாக இது கொண்டாட்டத்துக்குரிய ஒரு தருணம். சென்னைப் புத்தகக் காட்சியை மிகப் பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளையும் பதிப்புத் துறையில் புதிய நம்பிக்கையையும் இந்தப் புத்தகக் காட்சி உருவாக்கி இருக்கிறது'' என்றார்.
உள்ளே மட்டுமல்ல; வெளியேயும்: இதே கருத்தைத்தான் சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு எதிரே நடைப்பாதையில் புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்த பழைய புத்தக வியாபாரிகளும் பிரதிபலித்தனர். சுமார் கால் கி.மீ. நீளத்துக்கு அவர்கள் அமைத்திருந்த "பழைய புத்தகக் காட்சி'யும் இந்த முறை பிரமாதமான வரவேற்பைப் பெற்றிருப்பதாக பழைய புத்தக வியாபாரிகள் கே. நந்தகோபால், கே.என். ஹைதர் ஹுசேன் இருவரும் தெரிவித்தனர்.
புதிய வாய்ப்புகளை நம்முடைய எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகின்றனர் என்பதே எதிர்வரும் சென்னைப் புத்தகக் காட்சிகளின் புதிய உயரங்களைத் தீர்மானிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் கட்சிப் பெயா்: காவல் துறையினா் விசாரணை

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு வழிகாட்டி மையத்தை அணுகலாம்! - ஆட்சியா் இரா. சுகுமாா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


