அடிப்படை வசதிகளின்றி கிராம மக்கள் அவதி!

திருவெறும்பூர்: நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இன்றி, திருவெறும்பூர் அருகேயுள்ள தொண்டைமான்பட்டி கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம், திருவெறும்பூர
அடிப்படை வசதிகளின்றி கிராம மக்கள் அவதி!
Updated on
2 min read

திருவெறும்பூர்: நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இன்றி, திருவெறும்பூர் அருகேயுள்ள தொண்டைமான்பட்டி கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள அரசங்குடி ஊராட்சிக்குள்பட்டது தொண்டைமான்பட்டி கிராமம். இந்தக் கிராமம் திருவெறும்பூரிலிருந்து கூத்தைப்பார் - கிளியூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சாலை, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இந்தக் கிராமத்துக்கு செய்து தரப்படவில்லை.

 தொண்டைமான்பட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், இந்தக் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவு வரை தனியார் வயல் வரப்புகளில்தான் நடந்து செல்ல வேண்டும். கோடைகாலத்தில் பிரச்னை இல்லை. ஆனால், நாற்று நடவு சமயங்களில் இந்த வயல் வரப்பை பயன்படுத்தும் கிராமமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

 பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த வயல் வரப்புகளில் நடந்து செல்லும் போது, பல நேரங்களில் சறுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வயல் வரப்புகளில் நடந்து செல்லும் போது, பாம்புகள் கடித்து பலர் உயிரிழந்துள்ளனர்.

 அரசு சார்பில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள்கூட இந்தக் கிராமத்தில் கடந்த ஆண்டு வரை கட்டப்படவில்லை. தற்போது, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பகுதியில் சிலருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. சாலை வசதி கோரி கடந்த திமுக ஆட்சியில் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதுகுறித்து கிராம மக்கள் கூறியது:

 இந்தப் பகுதி திருவெறும்பூர் ஒன்றியம், அரசங்குடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியாகும். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவிட்டுச் சென்று விடுகின்றனர்.

 ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெறும் அரசியல் வாதிகள் இந்தக் கிராமத்துக்கே வருவதில்லை. அண்மையில் தெருவில் சிமென்ட் சாலை அமைத்தார்கள். ஆனால், அந்தச் சாலை ஒரு மாதத்தில் பெயர்ந்துவிட்டது. ஊருக்குள் சாலை வசதி இல்லாததும் பெரும் சிரமமாக உள்ளது.

 பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு வயல் வரப்புகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. கோடை காலங்களில் வயல்கள் தரிசாக இருக்கும், அதனால் சிரமம் இருக்காது. ஆனால், வயல்களில் பயிர்கள் நட்டுவிட்டால் பயிர்களை மிதித்துத்தான் செல்ல வேண்டும். அப்போது நில உரிமையாளர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

 மேலும், இங்குள்ள மயானத்துக்கு செல்லவும் பாதை கிடையாது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கிராமத்துக்கு செல்ல நில உரிமையாளர்களிடம் பேசி சிறிதளவு நிலத்தைப் பெற்று சாலை வசதி செய்து தரக் கோரி, அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த மூர்த்தியிடம் மனு அளித்தோம். அவரும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 கடந்த திமுக ஆட்சியில்கூட மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தோம். ஆனால், அரசு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. ஏன், வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கூட எங்கள் கிராமத்துக்கு வருவதில்லை. எங்கள் கிராமமே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

 எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு உடனடியாக தொண்டைமான்பட்டி கிராமத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com