கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் புத்துயிர் பெறுமா?

மதுரை : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் புத்துயிர் பெறுமா? என்ற ஏக்கத்துடன் அச்சங்கங்களின் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.  இந்த சங்கங்களில் பணியாற்றி வரு
Updated on
2 min read

மதுரை : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் புத்துயிர் பெறுமா? என்ற ஏக்கத்துடன் அச்சங்கங்களின் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

 இந்த சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பலர் கடந்த 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருவதால் அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன.

 இன்றைய சூழ்நிலையில் வீடு கட்ட கடன் வழங்குவதற்கு வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிறுவனங்களில், நிரந்தர பணியில் இருப்பவர்களுக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வருமான வரி செலுத்தாத நடுத்தர மக்களுக்கும் வீடு கட்ட கடன் வழங்குவதற்காக 800-க்கும் மேற்பட்ட பிரதம கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இந்த சங்கங்களுக்கு தலைமை சங்கமாக சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் செயல்பட்டு வருகிறது.

 இந்த இணையம், தமிழக அரசின் உத்தரவாதத்துடன் பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று பிரதம கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு வழங்கி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக அரசின் உத்தரவாதம் நிறுத்தப்பட்டதால் இணையமானது பிரதம கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புதிய கடன்கள் வழங்குவதும் தடைப்பட்டது. இதனால் வீட்டு வசதி சங்கங்களை நம்பி இருந்த நடுத்தர மக்கள் வீடு கட்ட கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 மேலும், வீட்டுவசதி சங்கங்களில் நிதி சுழற்சி குறைந்ததால் அவை நலிவடையத் தொடங்கின. மேலும், எவ்வித விதிமுறைகளும் இல்லாமல் பல புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் முறையற்ற வகையில் கடன்கள் வழங்கப்பட்டதால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 இந்த பாதிப்பை மேலும் மோசமாக்கும் வகையில், கூட்டுறவு விவசாயக் கடன்களைப் போன்று கூட்டுறவு வீட்டுவசதி கடன்களும் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் கடன் பெற்றவர்கள் அவற்றை திரும்பச் செலுத்துவதை நிறுத்தி விட்டனர். இந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டில் அபராத வட்டி தள்ளுபடி, வட்டி குறைப்பு ஆகிய சலுகைகளை அரசு அறிவித்தது. அந்த சலுகை 2009 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என 2010-ம் ஆண்டு அரசு அறிவித்தது.

 அதோடு நில்லாமல் அதே ஆண்டு அக்டோபரில் மீண்டும் அபராத வட்டி தள்ளுபடி, வட்டி குறைப்பு போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அரசின் இந்த அறிவிப்புகளால் ஏதேனும் ஒரு நாளில் கடனும் தள்ளுபடி ஆகிவிடும் என்ற மனநிலையில் கடன் பெற்றவர்கள் அதை திரும்பச் செலுத்த முன்வரவில்லை. இதனால் சங்கங்களின் செயல்பாடு முற்றிலும் முடங்கி விட்டது. பிரதம வீட்டுவசதி சங்கங்களில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி தொகையான சுமார் ரூ. 500 கோடியும் மாநில இணையத்தில் இருந்து சங்கங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சங்கங்களின் நிதி நிலைமை மேலும் மோசமாகி விட்டது.

 இதனால் பல சங்கங்களில் பணியாளர்களுக்கு கடந்த 6 மாதம் முதல் 18 மாதம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதன் எதிரொலியாக பணியாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன என பணியாளர் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 அதுமட்டுமின்றி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று வீடு கட்டியவர்களின் பத்திரங்களை திரும்ப அளிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் பெற்றவர்களும் அதிருப்தியில் உள்ளனர். சங்கம் நலிவடைந்து விட்டதால் கடன் பெற முடியாமல் நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலைமையை மாற்ற கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை சீரமைக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கூட்டுறவாளர்கள். முதலாவது, வீட்டுவசதி சங்கங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரு சங்கம்தான் செயல்பட வேண்டும் என விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். எண்ணிக்கை குறைக்கப்படுவதால் அவற்றை கண்காணிப்பது எளிதாக இருக்கும்.

 சங்கங்களில் கடன் வழங்கும் முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

 சங்கங்களில் கடன்களை பெற்றவர்கள் முறையாக திரும்ப செலுத்தினால் அவர்களுக்கு அந்தந்த மாதத்தில் வட்டி மானியமாக 5 சதவீதம் வரை வழங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் கூட்டுறவு ஆர்வலர்கள்.

 வீட்டுவசதி சங்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதால் உபரியாகும் பணியாளர்களை அவரவரின் தகுதிக்கேற்ப இதர கூட்டுறவு நிறுவனங்களிலோ அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களிலோ பணி நியமனம் செய்யலாம் என்கின்றனர் பணியாளர் சங்க நிர்வாகிகள்.

 கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் கடன்களை வழங்குவதில் தமிழகம்தான் முன்னோடியாக திகழ்ந்தது. புதிய ஆட்சியில் மீண்டும் அந்த பொற்காலம் திரும்ப வேண்டும் என்பது கூட்டுறவாளர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com