சென்னை, ஜூன் 22: அரசு கல்லூரிகளில் நூலகர் பணியிடம் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இதுபோல் இந்த பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதியவர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 56 கல்லூரிகளில் நூலகர் பணியிடம் காலியாக உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தும் பேராசிரியர்களே, பொறுப்பு நூலகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், துறை பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதோடு, நூலகத்தையும் முழுமையாக கவனிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவற்றில் பல கல்லூரிகளில் நூலகத்துக்காக வாங்கப்படும் புத்தகங்கள் பட்டுவாடா, அரசு சார்பில் நூலக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துவது, மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்துவது வைப்பது என அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆய்வுகள் மற்றும் விளக்கங்களுக்கு தேவையான புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியாத ஏழை மாணவர்கள், கல்லூரிகளில் அமைந்திருக்கும் இந்த நூலகங்களையே நம்பியுள்ளனர். ஆனால், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக 56 அரசுக் கல்லூரிகளிலும் முழு நேர நூலகர்கள் இல்லாததால், போதிய பராமரிப்பின்றி பாழாகும் நிலைக்கு நூலகங்கள் தள்ளப்பட்டுள்ளன. தேவையான புத்தகங்கள் இவற்றில் இல்லாததோடு, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும், கிழிந்து அழியும் நிலையில் உள்ளன என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசாணை...
முன்னதாக அரசு கல்லூரிகளில் காலியாக இருந்து 56 நூலகர் பணியிடத்தையும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி நிரப்ப, கடந்த 2009 - ல் தமிழக அரசு அரசாணை (எண் 98) வெளியிட்டது. இதனடிப்படையில் இந்த பணியிடத்துக்கான தேர்வு குறித்த அறிவிப்பை 17-2-2010 அன்று வெளியிட்டு, 20-6-2010 அன்று தேர்வு நடத்தியது.
இந்த பணியிடத்துக்கான கல்வித் தகுதியாக நூலக முதுகலை (எம்.எல்.ஐ.எஸ்.) பட்டப் படிப்புடன், -நெட்- அல்லது -ஸ்லெட்- தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) முடித்திருப்பவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வு முடிவை 12 மாதங்களாக வெளியிடாதது ஏன்?
நூலகர் பணியிடத்துக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்தத் தேர்வை 110 பேர் எழுதினர். ஆனால், இந்த தேர்வு நடத்தி ஒரு ஆண்டு முடிந்து விட்ட நிலையிலும், தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. இன்னும் வெளியிடவில்லை.
இதனால், எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இவர்களிடையே எழுந்துள்ளது.
அடுத்த நடந்த தேர்வில் பங்கேற்க முடியாத நிலை...
இதற்கிடையே சென்னை கோட்டூர்புரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்காக பல்வேறு நிலைகளின் கீழ் 100 நூலகர்களுக்கானத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் நேரடித் தேர்வாக நடத்தப்பட்டது. இதற்கான கல்வித் தகுதியும், பல்வேறு நிலைகளுக்கு வெவ்வேறாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது சில நிலைகளுக்கு -நெட்- அல்லது -ஸ்லெட்- தேர்ச்சி அவசியம் என்றும் சில நிலை பணியிடத்துக்கு அந்தத் தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அரசு கல்லூரி நூலகர் பணியிடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களில் பலர் தேர்வு முடிவுக்காக காத்திருப்பதால், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக பணியிடத் தேர்வை தவிர்த்துவிட்டனர்.
இதன் காரணமாக இவர்களைவிட கல்வித் தகுதியிலும், பணி அனுபவத்திலும், வயதிலும் குறைவானவர்கள் கூட, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசுப் பணியை பெற்றுவிட்டனர். எனவே, ஏழை மாணவர்களின் நலன் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் போக்கும் வகையில், தேர்வு முடிவை விரைவில் வெளியிட தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்பதே தேர்வு எழுதியவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறியது:
தேர்வு எழுதியவர்களில் சிலரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

