டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

என்ன வேண்டும் எங்களுக்கு? உயர் கல்வித் துறை

உயர் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.  உயர் கல்வி மன்றம், தொழில்நுட்பக் கல்வி மன்றம், அறிவியல் தொழில்நுட்ப மன்றம் என பல்வேறு மன்றங்களை உருவாக்கி உ

Updated On :20 செப்டம்பர் 2012, 3:26 am

உயர் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

 உயர் கல்வி மன்றம், தொழில்நுட்பக் கல்வி மன்றம், அறிவியல் தொழில்நுட்ப மன்றம் என பல்வேறு மன்றங்களை உருவாக்கி உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

 அதே நேரம், கல்லூரியைத் தொடங்குவதுதான் நல்ல வருமானம் தரும் தொழில் என்பதை பண பலம் படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் நிரூபிக்கத் தவறுவதில்லை.

 எப்படியாவது தன்னுடைய மகனை பொறியியல் படிப்புகளில் சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்போடு, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்ய பெற்றோர் முண்டியடிக்கின்றனர்.

 இதைப் பயன்படுத்தி சுயநிதிக் கல்லூரிகள், பி.இ. இசிஇ-க்கு ரூ. 6 லட்சம், பி.இ. கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவுக்கு ரூ. 5 லட்சம் என கல்விக்கு விலை நிர்ணயம் செய்து விடுகின்றன.

 இது ஒருபுறம் இருக்க, சில தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மாணவர்களை ஈர்ப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தவறான தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுகின்றன. இந்தத் தகவல்களை நம்பி, அக்கல்லூரியைத் தேர்வு செய்யும் மாணவர்கள், பின்னர் ஏமாற்றமடைகின்றனர்.

 ஒற்றைச் சாளர முறை மூலம் ஒரு கல்லூரியில் சேர்க்கைக்கான உத்தரவு பெற்றுவிட்டால், வேறு கல்லூரிக்கு மாற முடியாது என்பதால், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத அதே கல்லூரியில் படிப்பைத் தொடர வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

 கூடுதல் கட்டண வசூல்: அரசு ஒதுக்கீட்டின் கீழ் இதுபோன்ற சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம், ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 32,500 மட்டும் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தது.

 ஆனால், கல்விக் கட்டணத்துடன், கட்டாய பஸ் கட்டணம், மெஸ் கட்டணம், ஆய்வுக் கூட கட்டணம் என அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கூடுதலாக ரூ. 1 லட்சத்துக்கும் மேல் சில கல்லூரிகள் வசூலித்துள்ளன. இதுகுறித்துப் புகார் தெரிவித்தால், அக மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்களோ என்ற பயத்தில், புகார் தெரிவிப்பதையும் தவிர்த்துவிட்டோம் என்கின்றனர் மாணவர்கள்.

 கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத ஒரு சில ஏழை மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர்.

 தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மன்றம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றிடம் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மீது உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

 இந்தப் புகார்களின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த மூன்று பேர் குழு சோதனை மேற்கொண்டு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, அறிக்கை ஏ.ஐ.சி.டி.இ.-க்கு அனுப்பி வைக்கப்படும், அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

 ஆனால், தமிழக அரசின் குழு கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வு கண்துடைப்பு நாடகம்தான் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

 6 அரசுக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 15 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என தமிழகத்திலுள்ள 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்து வெளிவரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 20 சதவீதத்தினர் மட்டுமே தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

 காரணம் என்ன? அரசிடமிருந்து வரும் நெருக்கடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான கல்லூரிகள் என்பதாலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.

 அதையும் மீறி சோதனைக்காக தில்லியிலிருந்து வரும் அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு நன்கு கவனித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். என்ன செய்ய வேண்டும்? கல்வி வியாபாரமாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு பொறியியல் கல்லூரியை அரசே உருவாக்க வேண்டும். அதே நேரம், அங்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்.

 சுயநிதிக் கல்லூரிகளில் தகுதியுடைய மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை சுயநிதிக் கல்லூரி கூட்டமைப்பு மூலம் நிரப்புவதே முறையானது.

 கடுமையான சட்டம் தேவை: தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் நிர்ணயிக்கப்படாத கட்டணம் வசூல் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும், இணையதளத்தில் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தவறான தகவலைத் தரும் கல்லூரியை அரசுடமை ஆக்கும் வகையிலும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்.

 மாநில அரசிடம் உறுதியான கொள்கை இருந்தால், இதைக் கட்டுப்படுத்துவது எளிது.

 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள "முறைகேடுகள் தடுப்பு சட்ட மசோதா', விரைந்து நிறைவேற்றப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம்தான் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.

 பாடத்திட்டத்தில் மாற்றம்: முன்னர் ஒரு துறையில் படித்தவர்களுக்கு, அந்தத் துறையிலேயே வேலை கிடைக்கும். ஆனால், இப்போது இந்த நிலை மாறிவிட்டது. பல்துறை திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

 தொழில்நுட்பக் கல்வி பாடத் திட்டத்தில் இயற்பியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. இவை உரிய அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

 பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் வழங்கும் முறைதான் இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது. இதை மாற்றி எழுத்துத் திறன், பேச்சுத் திறன், ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

 கலை, அறிவியல் கல்லூரிகளில்: கலை அறிவியல் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்ட தன்னாட்சி அந்தஸ்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.) அதிகரித்துள்ளது. அதாவது 15 சதவீதம் கூடியுள்ளது.

 ஆனால், தன்னாட்சி அந்தஸ்து காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து, கல்வித் தரம் குறைந்துவிட்டது. சென்னையில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு முன்பு 20 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அடுத்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுபோல் தன்னாட்சி அதிகாரம்பெற்ற மற்ற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கல்வித் தரம் குறைவதற்கு இதுவே வெளிப்படையான சாட்சி.

 இரட்டை மதிப்பீடு முறை: தேர்வுத்தாள் திருத்தும்போது இனாம் மதிப்பெண் (மாடரேஷன் மதிப்பெண்) வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. அதாவது குறிப்பிட்ட கல்லூரியின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்திருக்கும்போது, அதை உயர்த்திக் காட்டுவதற்காக இந்த முறை கையாளப்படுகிறது. மாடரேஷன் மதிப்பெண் என்ற பெயரில் முன்னர் 4 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 8 மதிப்பெண் வரை வழங்க அனுமதிக்கப்படுகிறது. இது கல்வித் தரத்துக்கு ஆரோக்கியமான போக்கு அல்ல.

 எனவே, இதுபோன்ற இனாம் மதிப்பெண் முறையை ரத்து செய்து, முதுநிலை படிப்புகளுக்கு உள்ளது போல் இளநிலை பட்ட தேர்வுத்தாளுக்கும் இரட்டை மதிப்பீடு முறையைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மாணவரின் கல்வித் தரம் உண்மையில் உயரும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.