மதுரை: பஸ் கட்டண உயர்வு பல்வேறு தரப்பு மக்களையும் பாதித்துள்ள நிலையில், சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐ.ஆர்.டி.) 3 பாலிடெக்னிக் கல்லூரிகளை "உயிர் பிழைக்க' வைக்கும் என அவற்றின் ஆசிரியர்களும், ஊழியர்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஐ.ஆர்.டி.க்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்கிவரும் மானியத் தொகையானது, நஷ்டம் காரணமாக முறையாக வழங்கப்படாததால், வரும் கல்வியாண்டு முதல் 3 பாலிடெக்னிக் கல்லூரிகளும் மூடப்படும் நிலையில் இருப்பதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1991-ல், முதன்முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது, அவர் வெற்றிபெற்ற பர்கூர் தொகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு 1992-ல் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.
வட மாவட்டத்தினருக்காக சென்னை குரோம்பேட்டையிலும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தினருக்காக திருநெல்வேலியிலும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அப்போது இந்தப் பகுதிகளில் ஒருசில பாலிடெக்னிக் கல்லூரிகளே இருந்ததால், இவற்றில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி இருந்தது. போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி வழங்குவது இவற்றின் பிரதான நோக்கமாகும்.
இந்தக் கல்லூரிகளில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் ஆகிய 3 பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ùóசன்னையிலும், பர்கூரிலும் தலா 180 மாணவர்கள், திருநெல்வேலியில் 160 மாணவர்கள் என ஆண்டுதோறும் மொத்தம் 520 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அரசு விதிமுறைப்படி ஆண்டுக்கு ரூ. 7,115 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் இந்தக் கல்லூரிகளில், 50 சதவீத இடங்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மற்றவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் சுமார் 110 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நிதி ஆதாரம் : இந்தக் கல்லூரிகளை நிர்வகிக்கத் தேவையான நிதியானது, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும், ஒவ்வொரு பஸ்ஸýக்கும் ஆண்டுக்கு ரூ. 100 வீதமும், புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களிடம் வட்டி இல்லாமல் திருப்பி அளிக்கக்கூடிய நிதியாக ரூ. 10 ஆயிரமும் வசூலிக்கப்படும். இந்த நிதியானது நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு கல்லூரிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவை சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய மானியத்தை முறையாக அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆதலால் வைப்புத்தொகையைக் காலியாக்கி நிர்வாகச் செலவும், ஊழியர்களுக்கு ஊதியமும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கல்லூரிகளின் நிதி ஆதாரத்தை பெருக்க, இந்த ஆண்டு முதல் போக்குவரத்து ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களில் மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் ஆண்டுக்கு கட்டணமாக ரூ. 23 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நிதிப் பற்றாக்குறையால் இந்த 3 கல்லூரிகளையும் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், வைப்புத்தொகையைக் கொண்டு இன்னும் 6 மாதங்களுக்கு மட்டுமே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியும் என்றும் சாலைப் போக்குவரத்து நிறுவன நிர்வாகிகள் இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே கல்லூரிகளை மூடுவதன் தொடக்கமாக வரும் கல்வியாண்டு முதல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
பஸ் கட்டண உயர்வால் உயிர் : இந்நிலையில் இப்போது பஸ் கட்டணம் அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துக் கழகங்கள், சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய மானியங்களை முறையாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் 3 கல்லூரிகளும் "உயிர் பெறும்' என ஆசிரியர்களும், ஊழியர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மேலும் இந்தக் கல்லூரிகளைத் தொடங்கியவரே இப்போதும் முதல்வராக இருப்பதால், கடந்த காலங்களில் எவ்வித மேம்பாடும் அடையாத இந்தக் கல்லூரிகள் இப்போது மேம்பாடு அடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அதிகமான வேலைவாய்ப்பு உள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைத் தொடங்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் தொடங்கப்படவில்லை. எனவே வரும் கல்வியாண்டு முதல் அப்பாடப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்றும், நீண்ட நாள்களாகப் பதவி உயர்வு இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.