வங்கித் துறையில் அரசு தலையீடு
மத்திய அரசின் நோக்கமும் பாரத ரிசர்வ் வங்கியின் சிந்தனையும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போக வேண்டும் என்பதில்லை


மத்திய அரசின் நோக்கமும் பாரத ரிசர்வ் வங்கியின் சிந்தனையும் எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போக வேண்டும் என்பதில்லை. அதேநேரம் முக்கியமான விஷயங்களில் இவர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை எனில், அது மக்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்பு.
உதாரணத்துக்கு, புதிய வங்கிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு அவசரம் காட்டுகிறது. ரிசர்வ் வங்கி நிதானப்போக்கை மேற்கொள்கிறது. அதேபோல், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பது அரசின் வாதம். அப்படிச் செய்தால், பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இவையெல்லாம் சித்தாந்த அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் என எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அண்மைக்காலமாக, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளில் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகள் அரசுக்குச் சொந்தம் என்பது தெரிந்த விஷயம். அதேநேரம், வங்கிகளை வழிநடத்துவதும், கண்காணிப்பதும் ரிசர்வ் வங்கியின் பணி அல்லவா? அப்படி இருக்க, கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், மத்திய நிதி அமைச்சகத்தின், நிதிச் சேவைகள் துறை பொதுத்துறை வங்கிகளுக்கு 36 விதிமுறைகளை வகுத்து அனுப்பியுள்ளது. இவற்றில் பல புத்தம் புதிய விதிமுறைகள் மற்றும் சிலவற்றின் வாயிலாக ஏற்கெனவே அமலில் இருக்கும் விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் பணியை நிதி அமைச்சகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுகுறித்து பொருளாதார நோக்கர்கள் விமர்சித்தபோது, நிதிச் சேவைகள் துறைச் செயலர் அளித்த பதில், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் "சோம்பல் போக்கிலிருந்து' அவற்றைத் தட்டி எழுப்புவதும், சிறுதொழில் மற்றும் விவசாயக் கடன் வழங்குவதில் வங்கிகள் முனைப்புக் காட்ட வேண்டும் என்பதுமே நோக்கம் என்கிறார் நிதிச் சேவைகள் துறைச் செயலர்.
இதுபோன்ற சொற்கள் பழைய காலத்து முதலாளித்துவ அதிகாரத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்த யுகத்தில், பொது மன்றங்களில் பேசக்கூடிய வார்த்தைகளாக இல்லை.
1969-இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது முதல், வங்கிச் சேவை, வணிகத்துறைகளுக்கு மட்டும் அல்லாமல் சிறு தொழில், விவசாயம், ஏற்றுமதி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் கிடைக்க வேண்டும்; அதுபோல், நகரங்களுக்கு மட்டுமல்லாமல் நடுத்தர, சிறிய ஊர்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்பதில் அரசு காட்டிய முனைப்பு பாராட்டுக்குரியதாக இருந்தது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இதற்கு முன்பு நிகழாத வகையில், மிகப்பெரிய அளவில் வங்கிக்கிளைகள் இந்தியாவில் பட்டி தொட்டிகளில் எல்லாம் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையிலும், வழிகாட்டுதலின் பேரிலும்தான் நிகழ்ந்தன. அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை முடிவுகளின்படிதான் செயல்படுத்தப்பட்டது.
அதேபோல், கடந்த பல ஆண்டுகளாக, அவ்வப்போது பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு வழங்கி வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மூலதன உதவியும் குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட "பேசல்-3' விதிமுறையின்படி, வங்கிகளுக்குக் கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறது.
அதற்காக, 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் ரூ. 15,000 கோடி அளவுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு மூலதனம் வழங்க உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு அளித்து வந்த மூலதன உதவி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த உண்மையை 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியின்போது உலகம் நன்கு உணர்ந்தது.
அமெரிக்க சரித்திரத்தில் முதல்முறையாக, தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஒரு முதலாளித்துவ நாட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. அதேபோல் இங்கிலாந்திலும் வங்கிகள் அதுசமயம் தேசியமயமாக்கப்பட்டன.
சர்வதேச நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பியதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கிகள் வலுவாக இருந்தன என்பதும், பாரத ரிசர்வ் வங்கி வங்கிகளை சீராக வழிநடத்திச் சென்றன என்பதும்தான்! இதை உலக நாடுகள் வெளிப்படையாகப் போற்றிப் பாராட்டின. ஆக, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, அவற்றின் பெரும்பான்மையான பங்குகள் அரசின் கையில் இருப்பதால், வங்கிகளுக்குப் பாதுகாப்பும் வலுவும் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
எனினும் வங்கிகள் வணிகரீதியில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பது முக்கியம். அந்தந்த வங்கியின் இயக்குநர் குழு வங்கிகளை நிர்வகித்திட வேண்டும். அவற்றுக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதும், கண்காணிப்பதும் ரிசர்வ் வங்கியின் பணி; மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பணி அல்ல. இதை ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பராவ் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இதே கருத்தை முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டியும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பிரதிநிதிகள் (இணைச் செயலர் மற்றும் செயலர் பொறுப்பில் உள்ளவர்கள்) ஒவ்வொரு வங்கியின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மூலம் அரசின் கொள்கைகளையும், கருத்துகளையும் இயக்குநர் குழு கூட்டங்களில் எடுத்துரைக்கலாம். அதைவிடுத்து, நேரடியாகவோ, தாக்கீதுகள் மூலமோ அரசு தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல.
அரசுடமை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் தங்களது நியாயமான, சட்டப்பூர்வமான சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் தன்மை உடையவர்களாக இருக்கிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதே வருந்தத்தக்க விஷயம். அவர்கள் தங்கள் பதவி உயர்வு, சாதகமான இடமாற்றம், வங்கி மாற்றம் ஆகியவற்றுக்கு அரசு செயலர்களின் தயவையே நம்பி இருக்கிறார்கள் என்பதுதான் அதற்கு காரணம்.
வழக்கமான கடன் மற்றும் பணக் கொள்கைகள் பற்றிய தங்களது கருத்துகளைக்கூட வெளிப்படையாகக் கூறுவதற்குத் தயங்குகிறார்கள் வங்கித் தலைவர்கள்! "சுதந்திரம்' என்பது போராடிப் பெற வேண்டும். அதைப் பேணிக் காத்திட வேண்டும். "சுதந்திரம்' பிறரால் வழங்கப்படும் பண்டமல்ல!
அண்மையில், மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டத்திருத்த மசோதாவில், புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்குத் தரப்பட்டுள்ளது. நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய வங்கிகளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விருப்பமுள்ள நிறுவனக் குழுமங்கள் விண்ணப்பித்தால், அவற்றை ரிசர்வ் வங்கி ஆழமாக ஆய்வு செய்து தகுந்த குழுமங்களுக்கு அனுமதி வழங்கும். புதிய வங்கிகள் தொடங்கப்படுவதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
புதிய வங்கிகள் செயல்படத் தொடங்கிய பிறகு, அந்த வங்கிகளைக் கண்காணிப்பது தவிர, தேவைப்பட்டால், அந்த வங்கிகளை நிறுவிய வர்த்தக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் ஆய்வுசெய்யும் அதிகாரம் பாரத ரிசர்வ் வங்கிக்கு புதிய சட்டம் தந்துள்ளது.
புதிய தனியார் வங்கிகளின் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்டு புதிய இயக்குநர் குழுவை அமைக்கும் அதிகாரமும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய வங்கிகளை நல்ல முறையில் நெறிப்படுத்துவதற்கு இந்த நடைமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் கரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரம், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்ற வங்கிகளின் இணைப்பு பற்றிய விவகாரங்களை, இந்திய வர்த்தகப் போட்டிகள் ஆணையம் (காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியா) என்கிற அரசுசார்ந்த அமைப்பு மேற்பார்வை செய்து முறைப்படுத்தும் என்று புதிய வங்கிகள் திருத்த மசோதா கூறுகிறது.
சாதாரணமாக, இது வங்கிகள் சார்ந்த விஷயம் என்பதால், இதுவும் ரிசர்வ் வங்கியின் பணியாகத்தான் இருக்க வேண்டும். மாறாக, காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியாவிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன என்பதை மத்திய நிதி அமைச்சகம் விளக்க வேண்டும்.
இந்த மாற்றம், ரிசர்வ் வங்கிக்கு ஏற்புடையதா என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தியின் பதில் கவனத்துக்குரியது: ""நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் ஒரு பிரிவு ரிசர்வ் வங்கிக்கு ஏற்புடையதா, இல்லையா என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?'' என்பதே அது! அவர் சொல்லாவிட்டாலும், சொல்ல வருவது என்ன என்பது எல்லோருக்கும் புரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...