"ஆமை வேகத்தில்' இணை மின்னுற்பத்தித் திட்டங்கள்!

சென்னை, பிப்.22: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தொடங்கப்பட்ட இணை மின்னுற்பத்தித் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், உற்பத்தி மேலும் ஓராண்டு கா
"ஆமை வேகத்தில்' இணை மின்னுற்பத்தித் திட்டங்கள்!
Updated on
2 min read

சென்னை, பிப்.22: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தொடங்கப்பட்ட இணை மின்னுற்பத்தித் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், உற்பத்தி மேலும் ஓராண்டு காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 சர்க்கரை ஆலைகளின் மின் தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளவும், ஆலைகளின் நஷ்டத்தைக் குறைக்கவும் இணை மின்னுற்பத்தித் திட்டம் 1997-ல் தொடங்கப்பட்டது. முதலில் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 பின்னர் இப்போதுள்ள 18 ஆலைகளில் 12-ல் இணை மின்னுற்பத்தியை தொடங்க கடந்த 2010-ல் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கெனவே இணை மின்னுற்பத்தி செய்யப்படும் பழைய ஆலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டமும் அடங்கும்.

 அதன்படி விழுப்புரம், தர்மபுரி, மதுரை, வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளிலும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை, விழுப்புரம் மாவட்டம் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றில் தலா 18 மெகாவாட்டும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 12 மெகாவாட்டும், இதர 9 ஆலைகளில் தலா 15 மெகாவாட் என மொத்தம் 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

 சர்க்கரை ஆலைகளில் அரைக்கப்படும் கரும்பின் சக்கையை எரிபொருளாகக் கொண்டு நீராவி உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் டர்பைனை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்படும். சர்க்கரை ஆலைகளில் இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தின்படி ஒரு டன் சர்க்கரையை அரைப்பதால் கிடைக்கும் சக்கையில் இருந்து 35 யூனிட் மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆனால் இந்தப் புதிய திட்டத்தின்படி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 125 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் உபரி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 வீதம் மின்சார வாரியத்திற்கு விற்று ஆலைகள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

 இந்த இணை மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தும் பணி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியமானது, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில் ரூ. 1,241 கோடி நிதியைக் கடனாகப் பெற்று பணிகளை 2010 மார்ச்சில் தொடங்கியது. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைந்து மின்னுற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் பணிகள் நிறைவடையவில்லை.

 12 ஆலைகளிலும் சுமார் 50 சதவீதக் கட்டுமானப் பணிகளே முடிவடைந்துள்ளன. மின் னுற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு அவை ஆலை வளாகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவை பிரிக்கப்படாத நிலையில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகின்றன.

 ஆட்சி மாற்றம், மணல் தட்டுப்பாடு, நிதிப் பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் பணிகளைக் குறிப்பிட்டக் காலத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக சர்க்கரைத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 இந்த இணை மின்னுற்பத்திக்கான நிர்மாணப் பணிகளை வட மாநில நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருந்தாலும், கட்டுமானப் பணியை திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் பினாமி ஒருவரே எடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதுவரையில் சுமார் ரூ. 443 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவைக்கு இந்த ஆலைகளின் இணை மின்னுற்பத்தி யானைப் பசிக்கு சோளப்பொறிதான் என்றாலும், ஆலைகள் உள்ள கிராமப்புறங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இவை ஓரளவு உதவும். 12 ஆலைகளிலும் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ள 183 மெகாவாட்டில் ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் போக எஞ்சிய 120 மெகாவாட் மின்சாரம் மின்வாரியத்திற்கு கிடைக்கும்.

 சர்க்கரை ஆலைகளின் நஷ்டம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதுவரை மொத்த நஷ்டம் சுமார் ரூ. 1,500 கோடி ஆகும். எனவே ஆலைகளில் இணை மின்னுற்பத்தியை குறிப்பிட்டக் காலத்தில் தொடங்கி இருந்தால் நஷ்டம் குறைவும் என்பதோடு, இப்போதைய மின்பாற்றாக்குறையை தீர்க்கவும் ஓரளவு உதவியாக இருந்திருக்கும்.

 இதுபற்றி தமிழக சர்க்கரைத் துறை அதிகாரிகள் கூறியது:

 "சர்க்கரை ஆலைகளில் தொடங்கப்பட்ட இணை மின்னுற்பத்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மின்னுற்பத்தி தொடங்கும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com