தொழில் வளர்ச்சி ஒருபுறம்; வறுமை மறுபுறம்
சென்னை, ஜன. 21: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. நெல் உற்பத்தியில் சிறந்து விளங்


சென்னை, ஜன. 21: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டிருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை.
நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் வறுமை சதவீதம் ஓரளவு குறைவாக உள்ளது.
சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு செலவிடுவோர் வரிசையில் வட மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
இது தொடர்பான புள்ளிவிவரங்களை தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11-வது ஐந்தாண்டுத் திட்டம் அமலில் உள்ளது. இது 2007-ம் ஆண்டு தொடங்கியது. 2012-ல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, 12-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டக் குழுவின் தலைவரான முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு திட்ட அறிக்கை மார்ச் மாத இறுதியில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐந்தாண்டு திட்ட காலத்தின் தொடக்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனித மேம்பாட்டுக் குறியீடு குறித்த கணக்கெடுப்பு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காக மக்கள் செலவிடும் அளவு கணக்கிடப்பட்டது.
எந்தெந்த மாவட்டங்கள்: மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சென்னை மாவட்டம் (0.842 புள்ளிகள்) முதலிடம் வகிக்கிறது. அதாவது, ஒரு புள்ளியைப் பெற்றால் அந்த மாவட்டம் சிறந்த மாவட்டமாக கருதப்படும். தனிநபர் ஆண்டு வருவாய் என்பது ரூ. 5,496.88 ஆகவும், வறுமை சதவீதத்தில் 10.2 ஆகவும் இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடம் வகித்தாலும் (0.791) வறுமை சதவீதம் 35 ஆக இருக்கிறது. தனிநபர் ஆண்டு வருவாயின் அளவு ரூ. 3,928.26 ஆக உள்ளது.
சென்னைக்கு அருகே தொழில் வளர்ச்சி பெற்றுவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் அளவு ரூ. 4,326.55ஆக இருந்தாலும், வறுமை சதவீதம் 25.2 ஆக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 4,178ஆக இருந்தபோதும் வறுமை சதவீதம் 22.3 ஆக இருக்கிறது.
"தொழில் வளர்ச்சி அதிகம் இருந்தால் வறுமை சதவீதம் குறைய வேண்டும். ஆனால், தூத்துக்குடி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் வறுமையின் அளவு 25-க்கும் மேல் இருக்கிறது. இதன்மூலம், தொழில் வளர்ச்சிகள் அனைத்தும் ஒருகுறிப்பிட்ட பிரிவினைருக்கு மட்டுமே பயன் அளிக்கிறது'' என பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள்: நெல் அதிகம் விளையும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொது மக்கள் பசி பட்டியின்றி வாழ முடிகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் என்பது ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமை சதவீதம் 10.9 சதவீதம் மட்டுமே. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை சதவீதம் 16.6 சதவீதம் மட்டுமே.
"தொழில் வளர்ச்சியால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்பதை தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் வறுமை சதவீதம் உணர்த்துகிறது. வேளாண்மைத் துறையின் மூலம், பொது மக்களின் தனிநபர் ஆண்டு வருவாய் குறைவாக இருந்தபோதும் வறுமை சதவீதத்தின் அளவு அதிகமாக இல்லை'' என்பதை புள்ளியியல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வட மாவட்டங்கள் நிலைமை: தொழில் வளர்ச்சியும், வேளாண்மையும் இல்லாத சில வட மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருப்பதாக மாநிலத் திட்டக் குழுவின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் தனிநபர் வருவாய் குறைவாக இருக்கும் அதே சமயம் வறுமை சதவீதத்தின் அளவு மிதமிஞ்சி இருக்கிறது. அந்த மாவட்டங்களில் வறுமையின் அளவு 45 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தவிர பிற வட மாவட்டங்களில் பாசன விவசாயமோ மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகளோ இல்லை.
எனவே, தொழில் வளர்ச்சி பரவலாக்கப்பட்டால்தான் வட மாவட்டங்கள் வாழ்வு பெறும் என பொருளியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வறுமை சதவீதம் அதிகமாக இருப்பதால் வட மாவட்ட மக்கள் அவசியத் தேவைகளுக்காக செலவிடும் தொகை மிகக் குறைவாகவே இருக்கிறது.
சரியும் வேளாண்மை: 11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் வேளாண் துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 2007 முதல் 2011-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் வேளாண் துறையில் எட்டப்பட்டது வெறும் 0.69 சதவீதம் மட்டும்தான். இதன்மூலம் வேளாண்மைத் துறை சரிவைச் சந்தித்து வருவது தெளிவாகிறது.
நிதி அதிகரிக்கப்படுமா?: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு 28 சதவீதத்துக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது 11 முதல் 12 சதவீதம் அளவுக்கே நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலை மாறினால்தான் காவிரி டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் வறுமை நிலை நீங்கி வாழ்வு பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...