

கோவை: பாலிதீன் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, அவற்றை நுகர்வோருக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பாலிதீன் பைகளை அதிக விலைக்கு விற்று அதையே லாபகரமான விற்பனைப் பொருளாக மாற்றி பணம் குவிக்கும் பணியில் ஷாப்பிங் மால்கள் ஈடுபட்டு வருகின்றன.
எந்தக் கடையிலும் பொருள்களை வாங்குவோர் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் தங்கள் கடை விளம்பரத்துடன் பாலிதீன் பைகளில் தருகின்றனர். இதனால் பொருள்களை நுகர்வோர் எளிதில் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் 40 மைக்ரானுக்குக் கீழ் உள்ள பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளன.
ஆனால் கடைகளில் பயன்படுத்துவோருக்குத் தான் இந்தத் தடையே தவிர உற்பத்தி செய்யுமிடத்தில் எவ்விதச் சோதனையையும் எந்த அதிகாரியும் மேற்கொள்வதில்லை. உற்பத்தி செய்யும் இடங்களில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால், கண்டிப்பாக அரசு நிர்ணயித்த அளவுக்குக் கீழ் உள்ள பாலிதீன் பைகள் வெளிவராது.
ஆனால் அதற்குப் பதிலாக, நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி சில பொருள்களைக் கைப்பற்றுகின்றனர்.
இப்போது கோவையில் பெரிய ஷாப்பிங் மால்களில் பொருள்களை வாங்குவோரிடம் பாலிதீன் பைகளை சம்பந்தப்பட்ட கடைகளே விற்பனை செய்கின்றன. பொருள்களை வாங்குவோர் பைகள் கொண்டு வந்தால் பிரச்னையில்லை. இல்லாவிடில் அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயருடன் கூடிய பாலிதீன் பைகள் ரூ. 1 முதல் ரூ. 3 வரை விற்கப்படுகின்றன.
பொருள் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை விட ஒரு நாளுக்கு பாலிதீன் பைகள் விற்பனையில் மட்டுமே சம்பந்தப்பட்ட கடைகள் ரூ. 5,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை லாபம் பார்க்கின்றன. இதில் பாலிதீன் பைகளின் விலை பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சம்பந்தப்பட்ட கடைகளில் உள்ள பொருள்களில் பெரும்பாலானவை பாலிதீனால் தயாரிக்கப்பட்ட மெல்லிய உறைகளால் மூடப்பட்டவை.
காய்கறிகள், பேக்கரிப் பொருள்கள், இறைச்சிப் பொருள்கள் ஆகியவற்றை பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தாமல் வீடுகளுக்கு நுகர்வோர் எடுத்துச் செல்வதில்லை.
கோவை, புரூக்பீல்டில் உள்ள ஒரு ஹைபர் மார்க்கெட்டின் வாடிக்கையாளர் சேவை மையத்தில், வாடிக்கையாளர்களிடம் பாலிதீன் பைகளுக்குப் பணம் வாங்குமாறு அரசாணை உள்ளது; மாநகராட்சியும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அரசு ஆணையைக் காட்டுமாறு கேட்டபோது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் அறிக்கையைக் காட்டினர்.
பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அவற்றை நுகர்வோருக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று அறிக்கையில் உள்ளதை சுட்டிக்காட்டிய வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதி, "மாநகராட்சி நிர்வாகம்தான் பாலிதீன் பைகளுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்' என்று கூறி இருப்பதைச் சுட்டிக் காட்டியவுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலிதீன் பைகளின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவற்றுக்காகக் காசு வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
பாலிதீன் பைகளின் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதையே காரணமாகக் கூறிக் கொண்டு அதே பைகளை நல்ல லாபத்துக்கு விற்பதைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
சம்பந்தப்பட்ட கடையில் பொருள்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தேவையென்றால் பைகளைக் கொண்டுவர வேண்டும் என்று கடை நிர்வாகம் தெரிவித்தால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதனால் வேறு வழியில்லாமல் அரசின் அறிக்கையைக் காட்டி பாலிதீன் பைகளை லாபத்துக்கு விற்கின்றன. அந்தப் பையைத் திருப்பித் தந்தாலும் அதற்காக வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.