நாமக்கல்லில் சர்வதேசத் தரத்தில் நூலகத்துடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்

நாமக்கல், ஜூன் 23: நாமக்கல் மாவட்டத்தை சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் முதன்மை பெற்ற மாவட்டமாக்கிட சர்வதேசத் தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் விரைவில் தொடங்கப
Updated on
2 min read

நாமக்கல், ஜூன் 23: நாமக்கல் மாவட்டத்தை சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் முதன்மை பெற்ற மாவட்டமாக்கிட சர்வதேசத் தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் விரைவில் தொடங்கப்படுகிறது.

பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், மோகனூர் சாலை பெரியபட்டியில் (பழைய நீதிமன்ற வளாகம்) அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நூலகத்துடன் கூடிய போட்டித் தேர்வு மையம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட தமிழக அரசால் அரசாணை வழங்கப்பட்டு, மூன்றாம் நிலை நூலகர் பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாணையுடன் கூடிய ஒரு போட்டித் தேர்வு மையம் அமைவது தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும்.

அங்குள்ள நிலத்தில் ரூ.47.55 லட்சம் மதிப்பீட்டில் இரு தளங்களில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்துடன் கூடிய போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்க டிஜிட்டல் திரையுடன் கூடிய அறை அமைந்துள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 120 பேர் வரை அமர்ந்து பயிற்சி பெற முடியும். தவிர, சிவில் சர்வீசஸ், யூபிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தேவையான உயர்தரமான புத்தகங்கள் அடங்கிய நூலக அறை மற்றும் ஆண், பெண்கள் அமர்ந்து படிக்க வசதியாக சிறப்பு வசதிகளுடன் கூடிய தனித் தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகமும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து சிறந்த முறையில் செயலாற்றிட மாவட்டத்திலுள்ள முக்கியத் தொழிலதிபர்களை இணைத்து, தனியாக லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. வாரந்தோறும் சிறந்த பயிற்சியாளர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்தல், பயிற்சிக்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் இந்த அறக்கட்டளை ஏற்க உள்ளது.

சர்வதேசத் தரத்திலான பயிற்சிகள், நூல்களைத் தொடர்ந்து வழங்கிட சிவில் சர்வீசஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தவிர, போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான சர்வதேசத் தர நூல்களை டிஜிட்டல் முறையில் பெற்றிட தில்லி வாஜிராம் அன்ட் ரவி ஐஏஎஸ் அகாதெமியுடனும் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நூலகம், போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, அருகிலுள்ள அரசு தங்கும் விடுதிகளில் இலவசமாகத் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் பொது நூலகத் துறை செய்து வருகிறது.

இத்தகைய சிறப்புகளுக்குரிய இந்த நூலகம், போட்டித் தேர்வு பயிற்சி மையம் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் கூறியது:

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய வசதிகளும், புத்தகங்களும் இருப்பதில்லை. தவிர, தனியார் பயிற்சி மையங்களை அணுகி பயிற்சி பெறவும் அனைத்துத் தரப்பு மாணவர்களால் முடிவதில்லை.

இவற்றைக் கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு என்றே சிறப்பு நூலகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்கள், இதர ஆலோசனைகள் மனித நேய அறக்கட்டளை மூலம் பெறப்பட உள்ளன.

அதிகப்படியான மாணவர்கள் பயிற்சி பெற பதிவு செய்யும் பட்சத்தில், லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலேயே பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நூலகமும், பயிற்சி மையமும் தங்குதடையின்றி செயல்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த பலனை அளித்திட அனைத்து வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி மையத்தை நாமக்கல் மட்டுமன்றி பல்வேறு மாவட்ட இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மாவட்ட நூலகரின் பங்களிப்பு

சர்வதேசத் தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் அமைவதில் மாவட்ட நூலக அலுவலர் எஸ்.ஜெகதீஷ் பெரும் பங்கு வகித்துள்ளார். ஏற்கெனவே, அவரது முயற்சியில் தருமபுரியில் அமைந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அரசாணையுடன் கூடியதாக இல்லாததால், காலப்போக்கில் மாணவர்களுக்கு உரிய பலனைத் தருவாக இல்லை.

இதைக் கருத்தில் கொண்டு நாமக்கல்லில் அமைந்துள்ள இந்த நூலகம், போட்டித் தேர்வு பயிற்சி மையத்துக்கு அரசாணையும், நிரந்தர அலுவலர் பணியிடமும் பெறப்பட்டுள்ளன.

அத்துடன் நிரந்தரமாக இங்கு மாணவர்களுக்கு சிறந்தப் பயிற்சி கிடைத்திட தொழிலதிபர்களை இணைத்து அறக்கட்டளையும், அந்த அறக்கட்டளைக்கு சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப் பயிற்சி மையம் தொடர்ந்து சிறந்த பலனை அளிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான நூலகர்கள் தங்களது பணிகளை மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கும் வேளையில், நாமக்கல்லில் இந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைய மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

இதேபோல, தமிழகத்தின் அனைத்து மாவட்ட நூலகர்களும் முயற்சி மேற்கொண்டால் அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமையும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com