புத்தக விநியோகஸ்தர்களுக்கு பள்ளி பாடங்கள் கிடைப்பதில்லை !

கோவை: உரிமம் பெற்றுள்ள புத்தக விநியோகஸ்தர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனைக்குப் புத்தகங்களை வழங்குவதில்லை; மொத்தமாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட தனிப் புத்தகங
புத்தக விநியோகஸ்தர்களுக்கு பள்ளி பாடங்கள் கிடைப்பதில்லை !
Updated on
1 min read

கோவை: உரிமம் பெற்றுள்ள புத்தக விநியோகஸ்தர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனைக்குப் புத்தகங்களை வழங்குவதில்லை; மொத்தமாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட தனிப் புத்தகங்களை வாங்கும் மாணவ மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் அரசே இலவசமாக வழங்குகிறது. மேலும் தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்குத் தேவையான புத்தகங்கள் பாடநூல் கழகத்தின் மண்டல விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை மாவட்டத்தைப் பொருத்த வரையில் அரசின் உரிமம் பெற்ற 150 புத்தக விற்பனையாளர்கள் உள்ளனர். அரசிடம் இருந்து புத்தகங்களைப் பெற்று விற்பனை செய்யும் பணியில் இவர்களில் பலர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. ஒரு கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும். மொத்த விற்பனைத் தொகையில் 5 சதவீதம் கமிஷனாக விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது புத்தகங்கள் அனைத்தும் நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. கோவையில் உள்ள மண்டல அலுவலகத்தில் புத்தக விற்பனையாளர்கள் கேட்டபோது, சென்னையில் இருந்து வந்த உத்தரவுப்படி பள்ளிகளுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்த ஆண்டும் அதேபோல நேரடியாக 10-ம் வகுப்புப் புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்குகின்றனர். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் புத்தகங்களை மொத்தமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

திடீரென்று ஏதாவது ஒரு புத்தகம் மட்டும் தேவையென்றால் பள்ளிகளில் இருப்பு இருப்பதில்லை. அந்தப் புத்தகம் விற்பனை மையங்களில் இருந்தால் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால் அங்கும் கிடைப்பதில்லை. இதனால் தனியாக ஒரு புத்தகம் மட்டும் தேவைப்படும் மாணவ மாணவியர் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து கோவை புத்தக வியாபாரிகள் சங்க செயலர் ஏ.காளியப்பன், பொருளாளர் ஆர்.எம். சுப்பிரமணியம் ஆகியோர் கூறுகையில், ""கடந்த ஆண்டிலிருந்து விநியோகஸ்தர்களிடம் புத்தகங்களை விற்பனைக்கு வழங்குவதில்லை. இந்த ஆண்டு பாடநூல் கழகத்திடம் கேட்டபோது ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லை'' என்றனர்.

இது தொடர்பாக பாடநூல் கழக மண்டல அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பள்ளிகளுக்கு நேரடியாக வழங்குமாறு சென்னை அலுவலகத்தில் இருந்து கூறுகின்றனர். அதனால் தான் அ வர்களுக்கு வழங்குகிறோம். மக்களும் தங்களுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் வாங்க வங்கி வரைவோலை கொடுத்தால் தருகிறோம். புத்தகம் தனித் தனியாக வழங்க முடியாது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com