கோவை, மே 7: மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தால் கடந்த 5 நாள்களில் ரூ.180 கோடி மதிப்புள்ள காடாத் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், பல்லடம், மங்கலம், அவிநாசி ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. விசைத்தறிகளுக்கான மின் கட்டணம் அண்மையில் சுமார் 110 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. கூலிக்கு வேலை செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் பலர், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைச் செலுத்த மறுத்தனர்.
இந்த நிலையில் மின் வாரியத்தினர், சுமார் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களின் மின் இணைப்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. ஒரு தறியில் தினமும் 60 மீட்டர் காடாத் துணி நெசவு செய்ய முடியும். இதன்படி தினமும் 1 கோடியே 20 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் காடாத் துணியின் சராசரி உற்பத்தி விலை ரூ.30 வீதம் கணக்கிட்டால் ஒரு நாள் உற்பத்தி ரூ.36 கோடி.
கடந்த 5 நாள்களாக வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு மட்டும் ரூ.180 கோடி. வேலைநிறுத்தத்தால் தொழிலாளர்கள் யாருக்கும் ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இது தொடர்பாக பல்லடம் சொந்த விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் ராமசாமி கூறுகையில், ""விசைத்தறிக்கான மின் கட்டணம் மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி போராட்டம் நடத்தப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்'' என்றார்.
திருப்பூர் மாவட்ட விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் எம்.துரைசாமி, ""இப்போது நடந்து வரும் வேலைநிறுத்தத்தால் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் காடாத் துணியில் சுமார் 40 சதவீதம் ஆமதாபாத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு சாயமேற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால் ஏற்றுமதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே மின் வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி ஜவுளி உற்பத்தி, இப்போதைய வேலைநிறுத்தத்தால் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.