உ.வே.சா. வாழ்ந்த வீடு: உள்புறம் முழுவதும் இடிப்பு

சென்னை, செப். 17: சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு உள்புறம் முழுவதும் இடிக்கப்பட்டுவிட்டது. வெளிப்புற சுவர்கள் மட்டும் எஞ்சியுள்ளன. கட்டட ஊழியர்கள் இரவு நேரங்களில் வீட்ட
உ.வே.சா. வாழ்ந்த வீடு: உள்புறம் முழுவதும் இடிப்பு
Updated on
1 min read

சென்னை, செப். 17: சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு உள்புறம் முழுவதும் இடிக்கப்பட்டுவிட்டது. வெளிப்புற சுவர்கள் மட்டும் எஞ்சியுள்ளன.

கட்டட ஊழியர்கள் இரவு நேரங்களில் வீட்டை இடித்து ஜன்னல், கதவு, கம்பிகளை எடுத்துச் சென்று விடுகின்றனர். கட்டட இடிப்பைத் தடுக்க தீவிர முயற்சியை அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை என அந்த வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர் தெரிவித்தார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த வீடு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ளது.  அவருடைய மறைவுக்குப் பிறகு அவரின் வாரிசுகள் அந்த வீட்டைப் பராமரித்து வந்தனர். இப்போது அவரது வாரிசுகள் அந்த வீட்டை வேறொருவருக்கு விற்றுள்ளனர்.

வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் அதை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மிகுந்த வருத்தமும் தெரிவித்தனர். அந்த இல்லத்தை அரசு மீட்டு நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அங்கு சென்று, வீட்டை இடிக்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீட்டை இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால், அன்று இரவே மீண்டும் வீட்டின் உள்புறத்தை இடித்து, ஜன்னல் மரக் கட்டைகள், கம்பிகளை ஊழியர்கள் வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றதாக உ.வே.சா. வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரங்கநாதன் (70) என்பவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து பாதுகாத்த தமிழ்த் தாத்தாவின் வீடு இடிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வீடு இடிக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பத்திரிகைகளில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, வெளிப்படையாக இடிக்காமல் மறைமுகமாக இரவு நேரங்களில் இடித்து, இடிபாடுகளை உடனடியாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.

வீட்டின் வெளிப்புறம் மட்டுமே இடிக்கப்படாமல் காட்சியளிக்கிறது. உள்புறம் முழுவதும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே, இனி அரசே நினைத்தாலும் இதைக் காப்பாற்ற முடியாது. தொன்மை இலக்கியங்களை மீட்டுக் கொடுத்தவர் வாழ்ந்த இல்லத்தை மீட்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றார்.

சொந்த ஊரில்...: கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அரசால் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com