அரூர் வனச் சரகத்துக்குட்பட்ட இருளப்பட்டியில் காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.
ஒரு குட்டி யானை உள்பட 6 காட்டு யானைகள் கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டம், ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தன.
அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் வனத் துறையினர் விரட்டியதால், ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாப்பிரெட்டிப்பட்டி வனச் சரகத்துக்கு இந்த யானைகள் இடம் பெயர்ந்தன.
15கி.மீ. சாலையில் நடந்த யானைகள்: தருமபுரி மாவட்டம், மஞ்சுவாடி கணவாய்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மழைப் பொழிவு இருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் மழையில் நனைந்தபடியே விளையாடின. தொடர்ந்து, மஞ்சுவாடி கணவாயில் இருந்து சேலம் - அரூர் நெடுஞ்சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவு தார்ச்சாலை வழியாகவே யானைகள் இடம் பெயர்ந்து வந்தன.
போக்குவரத்து நிறுத்தம்: தார்ச்சாலை வழியாக இடம் பெயர்ந்த யானைகள், சாலையோரங்களில் உள்ள கரும்புத் தோட்டங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தின. சாலையில் யானைகள் நடந்து சென்ற போது வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால், சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தார்ச்சாலையில் யானைகள் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனப் போக்குவரத்துக்கு வனத் துறையினர் அனுமதி வழங்கினர்.
புதன்கிழமை பகல் முழுவதும் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வனச் சரகப் பகுதியை ஒட்டியுள்ள இருளப்பட்டி, நாகலூர் வனப் பகுதிகளில் யானைகள் முகாமிட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








