தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னெட், இல்மினைட் உள்ளிட்ட விலை உயர்ந்த தாது மணல் வகைகளை எடுக்கும் 6 இடங்களை சிறப்புக்குழுக்கள் திங்கள்கிழமைமுதல் (ஆகஸ்ட் 12) ஆய்வு நடத்த உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னெட் போன்ற விலை உயர்ந்த தாது மணல் வகைகள் சட்ட விரோதமாக அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அதுகுறித்து நேரில் ஆய்வு நடத்த வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இப்போது, தாது மணல் எடுக்கும் இடங்களில் ஆய்வு நடத்துவது தொடர்பாக மற்றொரு அரசாணை ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் வகைகளான கார்னெட், இல்மினைட், ருடைல் போன்றவை சட்டவிரோதமாக அள்ளப்படுகிறதா என சிறப்புக் குழு ஆய்வு செய்யும். இதற்காக ஒப்பந்தம் பெற்று மணல் அள்ளப்படும் 6 இடங்களிலும் ஆய்வு நடத்தப்படும்.
வருவாய், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் இந்தக் குழுக்களில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்தத் துறைகளின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் இந்த 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு குழுவிலும் மூத்த துணை மாவட்ட ஆட்சியர், நில அளவைத் துறையின் உதவி இயக்குநர் (நில அளவை ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள்), புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இடம்பெறுவார்கள்.
இந்த சிறப்புக் குழுக்கள் தாது மணல்களை அள்ளும் சுரங்கங்களில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரையிலும், ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளிலும் ஆய்வு நடத்துவார்கள்.
இந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்க வருவாய்த் துறைச் செயலாளருக்கு உதவியாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் மூத்த மாவட்ட வருவாய் அதிகாரி, நில அளவைத் துறையின் இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநர், கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் இடம்பெறுவர்.
தூத்துக்குடியில் நேரடி ஆய்வுகளுக்குப் பிறகு வருவாய்த் துறைச் செயலாளர் தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதிக்குள் செல்வார். அப்போது அறிக்கையை இறுதிசெய்ய மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் அவர் விசாரணையை மேற்கொள்வார்.
இந்தக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்கள், அறிக்கைகள், பொருள்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



