புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இல்லை

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு இந்தாண்டு கிடையாது என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :8 ஜனவரி 2013, 9:43 pm

பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு இந்தாண்டு கிடையாது என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கமாக பொங்கல் பண்டிகையின் சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்படும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இந்தாண்டு இயக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி நாள்களில் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களுக்காக காத்திருந்த தென் மாவட்ட பயணிகளுக்கு இச்செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆண்டு தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இந்தாண்டும் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே கடந்த சில நாள்களாக ஏற்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகையின்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால் 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான கூடுதல் சிறப்பு ரயில்களை இதுவரை தெற்கு ரயில்வே அறிவிக்காதது பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு தாமதமாவதால் இந்தாண்டு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், அது பயணிகளுக்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. ஆனால் அப்படிப்பட்ட கடைசி கட்ட கூடுதல் சிறப்பு ரயில்கள் இந்தாண்டு இயக்கப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நவம்பரில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்: 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அறிவித்தது தெற்கு ரயில்வே.

சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால் இந்தச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவில் இடம் கிடைக்காதவர்களும், காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களும் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் கூடுதல் சிறப்பு ரயில்களை பெரிதும் நம்பியிருந்தனர். அவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.

2012- பொங்கல் கூடுதல் சிறப்பு ரயில்கள்: மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வந்து பணிபுரிகின்றனர். இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு 2012-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவித்தது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக நாகர்கோவிலுக்கு கடந்தாண்டு ஜனவரி 13-ஆம் தேதி இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல ஜனவரி 17-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு சிறப்பு ரயில் ஜனவரி 14-ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டது. அதேபோல ஜனவரி 16-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து இதே மார்க்கத்தில் சிறப்பு ரயில் சென்னைக்கு விடப்பட்டது.

இவற்றை தவிர்த்து கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 17-ஆம் தேதி இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்டிரலில் இருந்து கோவைக்கு இரவு 18-ஆம் தேதி இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்தாண்டு இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கூடுதல் சிறப்பு ரயில் அறிவிக்கப்படாததற்கான காரணம் என்ன? இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை போக்குவரத்து மேலாளர் முரளி கூறியது: பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு கடைசி நேர பரபரப்பையும், கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தவே இந்தாண்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை.

ஆனால் 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 2013-ஆம் ஆண்டுக்கான சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை, கடந்தாண்டைவிட அதிகம். மேலும் சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருவனந்தபுரத்துக்கு துரந்தோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சோழன் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு கடைசி நேர கூடுதல் சிறப்பு ரயில்களை இந்தாண்டு தெற்கு ரயில்வே இயக்கவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.