ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நந்து வரும் கடல்சிப்பி பொருள்கள் தயாரிக்கும் தொழில்

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிசைத் தொழிலாக  நடைபெற்றுவந்த, கடல் சிப்பியாலான வீட்டு அலங்காரப் பொருள்கள் தயாரிக்கும்

News image
Updated On :28 அக்டோபர் 2013, 10:38 pm

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் குடிசைத் தொழிலாக  நடைபெற்றுவந்த, கடல் சிப்பியாலான வீட்டு அலங்காரப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தற்போது அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமன்றி உலகின்  பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் கடல் சிப்பிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வீட்டு அலங்காரப் பொருள்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இப்பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத்தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.

கன்னியாகுமரி, அகஸ்தீசுவரம், புவியூர், சுக்குப்பாறை தேரிவிளை, தெற்கு குண்டல்,  சாமிதோப்பு, ஆண்டிவிளை, முகிலன் குடியிருப்பு ஆகிய ஊர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தன.

சிப்பிகளைக் கொண்டு டோர் கட்டன், அலங்கார தொங்குவிளக்குகள், பூ ஜாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன.

காந்தி மண்டப சாலை, கடற்கரைச் சாலை, சன்னதி தெரு ஆகிய இடங்களில்  இப்பொருள்களை விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.  தற்போது இத்தொழிலில் 300-க்கும் குறைவான குடும்பங்களே ஈடுபடுகின்றன.

வருவாய் இல்லை: நீண்ட காலமாக இத்தொழில் செய்துவந்த சாமிதோப்பைச் சேர்ந்த அமுதா கூறியதாவது: கம்பெனிகளில் சிப்பியை வாங்கி வந்து மாலைகள் செய்து கொடுத்தால் குறைந்த அளவுதான் கூலியாக கிடைக்கிறது. இத்தொழிலில் பல ஆண்டுகளாக இருந்தாலும் போதிய வருவாய் கிடைப்பதில்லை என்பதால் தற்போது மீன்பிடி வலைகள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் என்றார் அவர்.

கன்னியாகுமரி பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள ஒரு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இப்பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

தொழிலாளர் பற்றாக்குறை: இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பொற்றையடியைச் சேர்ந்த உதயகுமார் கூறியதாவது:

ஆந்திரத்தில் காக்கிநாடா, தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட மாதங்களில் இதுபோன்ற கடல் சிப்பிகள் அதிகமாக கரை ஒதுங்குகின்றன. இவற்றை மொத்த விலைக்கு வாங்கி ஆசிட் மூலம் சுத்தம் செய்கிறோம். பின்னர் நல்ல தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு அவை வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. பின்னர் அவற்றைக் கொண்டு ஏராளமான மாடல்களில் வீட்டு அலங்காரப் பொருள்களைத் தயார் செய்கிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் ஏற்றுமதித் தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, கொல்கத்தாவுக்கும், ரஷியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான பெண்கள் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது அவர்கள் மாற்றுத் தொழிலுக்குச் சென்றதால் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு குறைந்த அளவு பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறோம் என்றார் அவர்.

சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கலாம்

இது குறித்து கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளையைச் சேர்ந்த டி.ஜான் சேவியர் ராஜன் கூறியதாவது: கலைநயம் மிக்க இத்தொழில் மேலும் நலிந்து போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நவீன மாடல்களில் மேலும் சில அலங்காரப் பொருள்களை தயார் செய்யும் பயிற்சியை சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு அளிக்க வேண்டும்.

வேலைக்கு தகுந்தவாறு கூலியினை இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்  அவர்களுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் தொழில் செய்வோருக்கு போதிய வருவாய் கிடைப்பதுடன் தொழிலும் நலிந்து போகாமல் பாதுகாக்கப்படும். பலவித மாடல்களில் பொருள்களை தயாரிக்கும்பட்சத்தில் ஏற்றுமதி திறன் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையையும் உருவாக்க முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.