அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மகனை போலீஸ் அடித்ததில் உயிரிழந்ததாகக் கூறி மறியல்: பதற்றம்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியாழக்கிழமை மாலை போலீஸார் அடித்ததில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மகன் உயிரிழந்ததாக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப் பகுயில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் இங்கு முகாமிட்டுள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு-கூமாப்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக பிரச்னைகள் இருந்து வருகிறது.இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, சந்திரபோஸ் ஆகியோர், மற்றொரு தரப்பினர் பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மேலும் ஆட்டோவில் வாந்தி எடுத்துள்ளனர். இதனை அங்கு வந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (26) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமுற்ற இருவரும் மது பாட்டிலை உடைத்து நாகராஜை குத்த வந்துள்ளனர். இதனை அறிந்த ராமசாமியாபுரம் அ.தி.மு.க. கிளைச் செயலாளரும், அந்த ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவருமான ராமச்சந்திரன் என்பவர் தங்கப்பாண்டி, சந்திரபோஸை ஆகியோரிடம் அடுத்த தெருவில் போய் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று சொல்லி சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற இருவரும், நீ என்ன அடுத்த சாதிக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாய் என்று கூறி தகராறு செய்து, ராமச்சந்திரனை அடித்துள்ளார்கள். இது குறித்து அவர் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளார். இது குறித்த தகவல் தங்கப்பாண்டி, சந்திரபோஸிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் ராமசந்திரன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு ராமச்சந்திரனின் மகன் பாலமுருகன் (30) இருந்துள்ளார்.
தங்கபாண்டி, சந்திரபோஸ் ஆகியோர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்றுள்ள தகவல் காவல் நிலையத்திற்கு கிடைத்ததையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் பஞ்சபாண்டி, போலீஸார் ரவி, மோகன்குமார் ஆகியோர் ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு பாலமுருகன் இறந்து கிடந்ததாக போலீஸார் கூறுகின்றனர். இதனையடுத்து பாலமுருகனை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி, அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு அவரது சடலத்தைப் போட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவ்வழியே கூமாப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பாலமுருகனை அடித்துக் கொன்ற போலீஸாரை விடக்கூடாது என்று கூறி ஒரு கும்பல் அவரைத் துரத்தியுள்ளது. இதனையடுத்து சார்பு ஆய்வாளர் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் பாலமுருகனின் வயிறு அசைந்துள்ளது.
இதனையடுத்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.பாலமுருகனை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாயும், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனை முன்பு பாலமுருகன் தரப்பினர் திரண்டுள்ளனர். சம்பவ இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.
இப் பகுதியில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலையுள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...