புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரயிலில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரயிலில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2014, 8:07 pm

ரயிலில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது.

ரயில் பயணத்தில் சில நபர்கள் குழுவாகச் சேர்ந்து இந்தச் செயல்களில் ஈடுபடுவதால், சக பயணிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாத சூழல் ஏற்படுவதோடு, பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பெண் பயணி ஒருவர், ரயில் பயணத்தின் போது மது அருந்தும் கும்பலால் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து புகைப்படத்துடன் முகநூலில் (ஃபேஸ்புக்) வெளியிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 19-ஆம் தேதி இந்தப் பெண் பயணம் செய்துள்ளார். இவருடன் மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர்களுக்குப் பக்கத்து இருக்கைகளில் 5 நபர்கள் குழுவாகப் பயணம் செய்தனர்.

ரயில் சிறிது தொலைவு சென்ற உடன், தங்கள் பைகளில் வைத்திருந்த மதுப் புட்டிகளை வெளியே எடுத்து வைத்து அந்த 5 நபர்களும் அருந்தினர். பின்னர், போதையில் தகாத வார்த்தைகளில் அவர்களுக்குள் உரையாடினர்.

இதனால், அங்கு கைக் குழந்தையுடன் பயணம் செய்த இளம் பெண் அச்சமடைந்து, வேறு இடத்துக்குச் சென்று அமர்ந்தார்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த நாங்கள் இருவரும், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தோம். அவர் ரயில்வே போலீஸ் அவசர உதவி எண்ணைக் கொடுத்து புகார் தெரிவிக்குமாறு கூறிச் சென்றுவிட்டார்.

பின்னர், அவசர எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தோம். ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்றபோது, பெட்டியில் போலீஸார் ஏறி புகார் அளித்த எங்களிடம் விளக்கம் கேட்டனர்.

நடந்ததைக் கூறியபோது, இதற்கு ஏன் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டீர்கள். அந்த நபர்களால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அதையும் மீறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ரயில் நிலைய காவல் நிலையத்துக்கு வந்து எழுத்து வடிவிலான புகார் அளிக்க வேண்டும் என அலட்சியமாகப் பதிலளித்தனர்.

ஆனால், மது அருந்திய நபர்களை போலீஸார் எள் அளவும் எச்சரிக்காமல் சென்றது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதைவிட, வேறு என்ன பணி ரயில்வே போலீஸாருக்கு இருந்துவிட முடியும் என்ற கேள்வியும் எங்கள் மனதில் எழுந்தது. ஆனால், அதை வெளிப்படையாக அவர்களிடம் கேட்க முடியவில்லை.

மனம் தளராமல் மீண்டும் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தோம். அதனைத் தொடர்ந்து, விருதாச்சலம் ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்ததும், அந்த ரயில் நிலைய போலீஸார் எங்களிடம் வந்து புகாரை மட்டும் பெற்றுச் சென்றனர். மது அருந்தி வந்த நபர்களை அவர்களும் எச்சரிக்கவில்லை.

இதனால், போலீஸார் இறங்கிச் சென்ற பிறகு, கன்னியாகுமரி சென்று சேரும் வரை சிறிதளவும் தூங்காமல் மனதில் அச்சத்துடனே இருவரும் பயணித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: ரயிலில் மது அருந்துவது சட்டப்படி குற்றம். அவ்வாறு மது அருந்துபவர்கள் மீது சக பயணிகள் புகார் அளித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், பயணிகள் எழுத்து வடிவிலான புகார் அளிப்பது அவசியமாகும். இதற்காக அவர்கள் ரயிலிலிருந்து இறங்கி காவல் நிலையத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ரயிலில் இருந்தபடியே புகார் அளிக்கலாம் என்றார் அவர்.

அவசர உதவி எண்கள்
ரயில்களில் மது அருந்துதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து அவசர உதவி எண்களைத் தொடர்பு கொண்டு பயணிகள் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக ரயில்வே போலீஸ் - 9962500500

ரயில்வே பாதுகாப்புப் படை

(சென்னை மண்டலம்) - 9003161710

ரயில்வே பாதுகாப்புப் படை

(அனைத்து இந்திய உதவி) - 1332

ரயில்வே பாதுகாப்புப் படை

(பெண்கள் புகார்) -  044-25353999

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.