விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திரூர் நெல் ஆராய்ச்சி மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக திரூர் நெல் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ளதாக அறிவியல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக திரூர் நெல் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ளதாக அறிவியல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் இதன் மூலம் விவசாயிகள் பயிரிடும் அனைத்திலும் அதிக லாபம் ஈட்டவும் முடியும் என அறிவியல் நிலைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

விதை நெல்லின் தரம், கூடுதல் உற்பத்தி, நோய் தாக்குதலிலிருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல் போன்ற விவசாயிகள் பயன்படும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாவட்டத்துக்கு ஒரு ஆராய்ச்சி மையம் என தமிழகம் முழுவதும் 32 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டன.

திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட திரூர் பகுதியில் 15.85 ஹெக்டேர் பரப்பளவில் 1942-இல் நெல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர் 1981-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நெல் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கு அதிகளவில் பயனளிக்கும் விதமாக கடந்த 2004-இல் இருந்து வேளாண் அறிவியல் நிலையமும் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

நெல் ஆராய்ச்சி நிலையம்: இந்த மையத்தில் 1950-ஆம் ஆண்டு முதல் நெல் பயிர் ரகம் டி.கே.எம். 1, அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை டி.கே.எம். 2, 3, 4 என இதுவரை 12 கலப்பின பயிர் ரகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

இதுபோல் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெளியிடும் விதை நெல் பயிரால் விவசாயிகள் இரண்டு மடங்கு மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும்.

மேலும் விவசாயிகள் பயிரில் நோய்த் தாக்குதல், பூச்சி அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நெல் ஆராய்ச்சி மையத்தை அணுகினால் அங்குள்ள அலுவலர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்த்து அதிக லாபமடையச் செய்கின்றனர்.

வேளாண்மை அறிவியல் நிலையம்: வயல்வெளி ஆய்வு மூலம் நிலையான பயன்பாடு, இடத்துக்கேற்ப தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து விவசாயிகளை பயனடையச் செய்வது, பல வகைப் பயிர்களில் செயல்முறை விளக்கத் திடல் அமைத்து உற்பத்தியின் அளவைக் கண்டறிதல், விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால தொழிற்பயிற்சி அளித்தல் உள்ளிட்டவையும் இந்த நிலையம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும் இந்த நிலையத்தின் மூலம் உழவர் தின விழா, கருத்து கண்காட்சிகள், கருத்தரங்குகள், வயல் விழா, பயிற்சி முகாம்கள், வயல்வெளி பார்வையிடல், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வேளாண் தொழில்நுட்பங்களை பரப்புதல், மகளிர் சுயவுதவிக் குழுவினருக்கு சிறப்புப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன.

இது குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா கூறியது:

நெல் ஆராய்ச்சி மையம் என்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும்.

இங்கு மாதம்தோறும் விவசாயிகளுக்கு உழவர் கருத்தரங்கம், விளைச்சல் செயல்விளக்கம், களப்பயிற்சி, வயல்வெளி ஆய்வு, வேளாண் பிரச்னைகளுக்கு தீர்வு, தொழில் முன்னேற்றப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கள் மூலம் அதிக லாபம் ஈட்ட பயிற்சிகள் அளித்து வருகிறோம்.

மேலும் பெரிய அளவில் பயிர்களில் பிரச்னை ஏற்படும் என அறியப்பட்ட நிலத்துக்கு நேரடியாகச் சென்று மண் பரிசோதனை மற்றும் பயிர் பரிசோதனை என பல வகையான பரிசோதனைகள் செய்து பயிரை செழிக்க வைத்துள்ளோம்.

இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் 30 முதல் 40 சதவீதத்தினர் விவசாயிகளாக உள்ளனர். அதில் இன்னும் 10 சதவீத விவசாயிகள் இந்த ஆராய்ச்சி மையம் குறித்து அறியாமல் உள்ளனர்.

அது போன்ற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமங்களுக்கு நேரில் சென்று துண்டுப் பிரசுரம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகளுக்கு நெல் ஆராய்ச்சி மையத்தின் பயன்கள் குறித்து விளக்கி வருகிறோம்.

அறிவியல் நிலையம் மூலம் வயல்வெளி ஆய்வு, செயல் விளக்கத் திட்டங்கள், உள்வளாக மற்றும் வெளிவளாகப் பயிற்சிகள், அனுபவங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்புடைய திட்டங்களை வகுத்தல் போன்றவை இங்கு விவசாயிகளுக்காக செய்யப்படுகின்றன.

எனவே விவசாயிகள் இந்த ஆராய்ச்சி மையத்தை அணுகி முழுமையான பயன்பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com