தமிழகத்தின் தலைநகரமான எழில்மிகு சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர்.
1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள்.
இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
அப்போதைய கிராமங்கள்: இப்போது பரபரப்பான பகுதிகளாகக் காணப்படும் எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1646-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையின் அப்போதைய மக்கள் தொகை வெறும் 19 ஆயிரமாக இருந்துள்ளது.
கிழக்கிந்திய கம்பெனிகாரர்கள் வியாபாரம் செய்வதற்காகத்தான் இங்கு வந்தனர் என்பதால் அவர்களோடு வாணிபம் செய்ய நிறைய உள்ளூர் வியாபாரிகள் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறினர். கம்பெனியின் வியாபாரம் வேகமாக பெருகப் பெருக அதற்கேற்ப பொதுமக்களின் போக்குவரத்தும் அதிகரித்தது.
கருப்பர் நகரம்: அப்போது ஆங்கிலேயர்கள் இருந்த பகுதி வெள்ளையர் நகரம் என்றும், ஆங்கிலேயர் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதி கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. முதல் நகர சபை: முதன்முதலில் 1688-ஆம் ஆண்டு சென்னை, முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. பின்னர் சென்னை மாகாணம் என்ற அந்தஸ்தை பெற்றது.
கைப்பற்றியது பிரெஞ்சு: 1746-ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சு அரசாங்கம் கைப்பற்றியது. பின்னர் 1749-ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்கு பிறகே சென்னை மாகாணம் அசுர வளர்ச்சி அடைந்தது. முக்கியமாக வாணிபத்துக்கான போக்குவரத்து வசதிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. தொலைபேசி, ரயில், சினிமா, தபால் போன்றவை அடுத்து அடுத்து மிக வேகமாக சென்னை மக்களுக்கு அறிமுகமாகியது.
பிரமிக்க வைத்த டிராம் வண்டிகள்: மாட்டு வண்டிகளையும், குதிரை வண்டிகளையும், எப்போதாவது தென்படும் சீமான்களின் கார்களையும் மட்டுமே சென்னை மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் முறையாக 1895-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி சென்னை நகர வீதிகளில் எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தப் போக்குவரத்தை சென்னை மக்கள் அதிசயித்துக் கண்டனர். இதில் முக்கியமாக அந்தச் சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. மேலும் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது.
முதல் சினிமா: இப்போது, அண்ணா சாலை தபால் நிலைய கட்டடத்தில் அப்போது திரையரங்கு இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக் கொட்டகை சென்னையில்தான் அறிமுகமானது. மேலும் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. கருப்பர் நகரமாக அறியப்பட்ட வட சென்னைப் பகுதிகளில் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலி பஜார் பிரபலமாக விளங்கியது.
மற்றொருபுறம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்து வந்தன. மேலும் சென்னை தென்னிந்தியாவின் வர்த்தக தலைநகராக உருமாறியது. ஒருபுறம் எளிய மனிதர்கள், மறுபுறம் ராஜாகள், நவாப்கள், ஆங்கிலேயர்கள் என உருமாறியது சென்னை. முக்கிய அடையாளங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல எழும்பூர் ரயில் நிலையம் 1908-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
சென்னை மாநகரின் வர்த்தகத்துக்கு துணை நின்ற சென்னைத் துறைமுகம் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் போக்குவரத்துகள்தான் சென்னையை ஒரு மிகப் பெரிய மாநகரமாக உருவாக்கின. அதேபோல கலாசார அடையாளமாகவும், ஆன்மிகத் திருத்தலங்களை உள்ளடக்கியதாகவும் சென்னை உள்ளது. ஹிந்து மதத்தின் சைவக் கோயில்களான மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் ஆகியவை உள்ளன.
வைணவக் கோயிலான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரசித்திப் பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு சாந்தோம் தேவாலயமும், இஸ்லாமியர்களுக்கு பெரிய மசூதியும் சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. மதராஸ்: 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தின் தலைநகர் மதராஸாக மாறியது.
பின்பு 1969-ஆம் ஆண்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் பகுதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தலைநகரின் பெயரான மதராஸ் 1996-ஆம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. அன்றைய சென்னையின் டிராம் வண்டிகள் இன்று மெட்ரோ ரயில்களாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்வளவு வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், சென்னை இப்போதும் தனது பழைமையையும், கலாசாரத்தையும் விட்டுக்கொடுக்காத மாநகராக விளங்குவதே அதன் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


