சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் வீசும் குப்பைகள் சேரும் இடமாகக் காட்சியளித்து வந்த பம்பை நதி, இப்போது தூய்மையாகக் காட்சியளிக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றவை.
நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த விசேஷ நாள்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதையொட்டி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ரூ. 121 கோடி மதிப்பீட்டிலான "மாஸ்டர் பிளான்' உருவாக்கப்பட்டது. இந்தப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படவில்லை என்றாலும், இப்போது குறிப்பிட்ட சில பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்துக்கான நிதியைச் சேகரிக்கும் பணியை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கேரள அரசுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிதி, பக்தர்களிடம் இருந்து நன்கொடையாகவும், அரவணப் பாயசம், அப்பம் ஆகியவற்றின் விலையை உயர்த்தி கோயிலின் வருமானத்தை அதிகரித்தும் திரட்டப்படுகிறது.
நிலக்கல் வாகன நிறுத்துமிடம்: கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துவரும் பேருந்துகள், தனியார் டிராவல்ஸ் வாகனங்கள், பம்பையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதி சரியான பராமரிப்பின்றி இருந்தது.
இப்போது, அங்கு ரூ. 10 கோடியில் குடிநீர், உணவகங்கள், கழிப்பறை, ஓய்வெடுக்கும் அறைகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பம்பை முதல் சன்னிதானம் வரை மேற்கூரை: ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் முன், பக்தர்கள் பம்பை நதியில் நீராடுவது வழக்கம். அவர்களின் வசதிக்காக பம்பை முழுவதும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் சிலர் பம்பையில் தங்களது துணிகளை ஆற்றோடு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், பம்பை நதியின் புனிதம் பாதிக்கப்படுகிறது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பம்பையில் துணிகளை விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களை முதலில் கேரள காவல் துறையினர் எச்சரிக்கின்றனர். அதையும் மீறி செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும், பக்தர்கள் தூக்கி எறியும் துணிகளை அப்புறப்படுத்த தன்னார்வத் தொண்டு அமைப்பினருடன் இணைந்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரின் முயற்சியின் பேரில், சபரிமலையின் புனிதத்தைக் காக்க பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளில் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக துணிப் பைகள் கொடுக்கப்படுகின்றன. இதை தன்னார்வத் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
மலைப் பாதையில் உயிரி கழிப்பறைகள்: கூட்டம் அதிமாக இருக்கும் நாள்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எவ்வளவு நேரம் சுவாமி தரிசனம் செய்ய காத்திருப்பர் எனத் தெரியாது. இந்த நேரங்களில் பக்தர்கள் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாவர்.
இதைக் கருத்தில் கொண்டு பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை மலைப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக புதிதாக உயிரி கழிப்பறைகள் (பயோ டாய்லெட்டுகள்) கட்டப்பட்டுள்ளன.
ஓய்விடங்கள்: சபரிமலைக்குச் செல்லும் மலைப் பாதையான நீலிமலை, அப்பாச்சி மேடு பகுதியில் பக்தர்களுக்கு மேற்கூரைகளுடன்கூடிய ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடப்பா கற்களால் இந்தத் தாற்காலிக ஓய்விடங்கள் அல்லது வரிசையில் காத்திருக்கும் வளாகங்களுக்கு பக்தர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. அதிகப்படியானக் கூட்டம் இருக்கும்போது பக்தர்கள் இங்கே தாற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு நெரிசலின்றி அனுப்பப்படுவர். அங்கு தங்கவைக்கப்படும் பக்தர்களுக்கு குடிநீர், உணவுகளும் இப்போது வழங்கப்படுகிறது.
சுப்பிரமணியப் பாதை சிமென்ட் சாலை: மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியோர் பயன்படுத்தும் சுப்பிரமணியப் பாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதை முழுவதும் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இந்த வழியிலும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இணையம் மூலம் பதிவு செய்து சுவாமி தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களும் இந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்ல முன்பு கழுதைகள் பயன்படுத்தப்பட்டது. இப்போது, கழுதைப் பாதையும் சிமென்ட், கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, பொருள்களை ஏற்றி இறக்குவதற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பக்தர்களின் ஒத்துழைப்பு தேவை: சபரிமலை பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பக்தர்களின் பங்களிப்பும் அவசியம் என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஐயப்பன் கோயில், சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும். சபரிமலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால், இங்கு பிளாஸ்டிக் பொருள்களை குப்பைத் தொட்டியில் பக்தர்கள் போட வேண்டும். சிறுநீர் கழிப்பதற்கு பக்தர்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என்றார்.
சன்னிதானத்தை காக்கும் தமிழக வீரர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தை பாதுகாக்கும் பணியில் தமிழகத்தின் கோவை பிரிவு அதிவிரைவுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பதினெட்டாம்படி, சன்னிதானப் பகுதிகளின் பாதுகாப்பை இவர்கள் ஆயுதம் தாங்கி உறுதி செய்கின்றனர். இந்தப் படை வீரர்கள் ஷிஃப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து அதிவிரைவுப் படை வீரர் ஒருவர் கூறியதாவது:
இந்தத் தலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. தனிப்பட்ட முறையில், இங்கு நாள்கள் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனை பேருக்கு தினமும் சபரிமலை சுவாமி ஐயப்பனை காணும் வாய்ப்பு கிட்டும்? எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


