டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சென்னைப் பல்கலை.யில் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருமா?

வகுப்புக்கு அரைக்கால் சட்டை அணிந்து வருவதைத் தடுக்கும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வர

Updated On :18 டிசம்பர் 2015, 8:02 pm

வகுப்புக்கு அரைக்கால் சட்டை அணிந்து வருவதைத் தடுக்கும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
 சென்னைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் அரைக்கால் சட்டையுடன் பங்கேற்ற வெளிநாட்டு மாணவர், தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர் பேசியபோது இடையே குறுக்கிட்டுக் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, அவர் அரைக்கால் சட்டை அணிந்து வந்ததாகவும், கருத்தரங்கில் குறுக்கிட்டதால் வெளியேற்றியதாகவும் பேராசிரியர்கள் கூறினர். இதைக் கண்டித்து மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் மாணவர் இவ்வாறு அரைக்கால் சட்டை, டி-சர்ட்டுடன் பங்கேற்றது ஏற்கத்தக்கதல்ல என்று சென்னைப் பல்கலைக்கழகமும் செய்திக் குறிப்பை வெளியிட்டது.
 மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக விவரக் குறிப்பில் மரியாதைக்குரிய ஆடை அணிந்துவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆடைக் கட்டுப்பாட்டை முழுமையாக அமல்படுத்தாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பிற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதைக் கருத்தில் கொண்டும், பிற பல்கலைக்கழகங்களைப்போல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் மரியாதைக்குரிய ஆடை என்றால் என்ன என்பதையும் பல்கலை. நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 பிற பல்கலைக்கழகங்களில் உள்ள ஆடைக் கட்டுப்பாடு: "அண்ணா பல்கலை.யில் ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளபோதிலும், மாணவர்களே மரியாதைக்குரிய ஆடைகளை உடுத்துவதால் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. 400 வெளிநாட்டு மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். மாணவர் அரைக்கால் சட்டை, கழுத்து இல்லாத டி-சர்ட் அணிந்துவர அனுமதிப்பதில்லை' என்றார் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன்.
 இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ஜி. செந்தில்வாசன் கூறுகையில், "10-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்புக்கு அரைக்கால் சட்டையோ, கழுத்து இல்லாத டி-சர்ட்டோ அணிந்துவர அனுமதிப்பதில்லை. அனைத்து மாணவர்களும் மரியாதைக்குரிய ஆடைகளை உடுத்திவரவே அனுமதிக்கிறோம்' என்றார்.
 சென்னைப் பல்கலை.யில் அமல்படுத்தாது ஏன்?
 சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது.
 ஆனால், தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாகவும், தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு தாய்ப் பல்கலைக்கழகமாகவும் விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்றுவரை மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படவில்லை.
 இதனால் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை உள்ளிட்ட சில துறைகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களும், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களும் அரைக்கால் சட்டை, டி-சர்ட் அணிந்து வகுப்புக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர் பேராசிரியர்கள்.
 ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு தேவை: இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:
 பெரும்பாலும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. மாணவர்கள் அணியும் உடைகள், மரியாதைக்குரியதாகவும், திசை திருப்பும் வகையில் இருக்கக்கூடாது. வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒர் ஆடைக் கட்டுப்பாடு, இந்திய மாணவருக்கு மற்றோர் ஆடைக் கட்டுப்பாடு என்ற நடைமுறை ஏற்கத்தக்கதல்ல.
 அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
"ஆடைக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த நடவடிக்கை'
 இந்தப் பிரச்னை குறித்து சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியதாவது:
 பல்கலைக்கழக விவரக் குறிப்பேட்டில், மாணவர்கள் மரியாதைக்குரிய ஆடைகளையே உடுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பிற பல்கலைக்கழகங்களைவிட சென்னைப் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதால், ஆடைக் கட்டுப்பாட்டை பெரிதாக வலியுறுத்துவதில்லை.
 அதே நேரம், வகுப்பு நேரங்களில் குறிபிட்ட சில மாணவர்கள் அரைக்கால் சட்டை, டி-சர்ட் அணிந்து வருவது, பிற மாணவர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்ற கல்வியாளர்களின் கருத்து சரியானதுதான்.
 எனவே, அடுத்து வரும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.