தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும் அடுத்த நாளின் விடியல் தங்களுக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தும் என நினைத்திருக்கமாட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. அதன் கோரத் தாண்டவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிஷங்களில் ஆழிப் பேரலையானது ஏராளமானோர் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது. அதன் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் மறையவில்லை.
இதற்கு முன்னர் வேறு எந்த ஆழிப் பேரலையோ அல்லது வேறு எந்த இயற்கைச் சீற்றமோ இத்தனை நாடுகளில் இத்தனை பேர்களைப் பலி கொண்டது இல்லை. அதுவும், தமிழகத்துக்கு இந்த ஆழிப் பேரலைத் தாக்குதல் என்பது புதிது. இதற்கு முன்னர் ஆழிப் பேரலையின் தாக்கத்தை தமிழக மக்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே, 2004 டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 12.58 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சரிந்தன.
நிலநடுக்கத்தை அளக்கும் கருவியான சீஸ்மோகிராப் 8.3 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்த நில நடுக்கங்களை இதற்கு முன்னர் எங்குமே பதிவு செய்ததில்லை. உலகில் இரண்டாவது பெரிய அளவாக, ரிக்டர் அளவுமானியில் 9.1 முதல் 9.3 வரை இந்த நிலநடுக்கம் பதிவானது. கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1,600 கி.மீ. நீள நிலத் தட்டுகள் சரியக் காரணமாக அமைந்தது. இந்த நிலத் தட்டு சரிந்ததால், அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து அதிவேகமாகக் கடல் நீரைத் தள்ளியது.
இதுவே ஆழிப் பேரலையாக உருவாகி, கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டு வந்தது. கடற்கரையோரம் 100 மீட்டர் உயரத்துக்கு எழும்பி உயிர்களையும் உடைமைகளையும் துவம்சம் செய்தது. பூமிப் பந்தை ஒரு செ.மீ., அளவுக்கு அசைத்துப் பார்க்கும் வல்லமையுடன் கூடியதாக இந்த நிலநடுக்கம் அமைந்தது என்றால், அதன் வலிமையை கற்பனை செய்து பார்ப்பதே பேரச்சமாக இருக்கும்.
லட்சக்கணக்கானோர் பலி: இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேரை இந்த ஆழிப் பேரலை பலி கொண்டுவிட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏழு ஆயிரம் பேர் பலியானார்கள். இந்தியாவில் பலி 10 ஆயிரத்திற்கும் மேலானது.
ஆயிரக்கணக்கானோர் சொந்தங்களையும், உடைமைகளையும் இழந்து பரிதவித்து நின்றனர். தாய், தந்தையரை இழந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதையானார்கள். பல்வேறு நிவாரணப் பணிகளை அரசும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், இன்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் உளவியல் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
மீனவத் துயரம்: சுனாமி பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்கள்தான். கடலை தங்களது கடவுளாக வழிபட்டு வரும் இந்த மக்களுக்கு, டிசம்பர் 26 ஆம் தேதி கருப்பு நாளாக மாறியது.
ஆழிப் பேரலையால் 51 மீனவக் கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின. தமிழகத்தில் 610 மீனவர்கள் இறந்தனர். 38 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பதே இன்று வரை விடை தெரியாத கேள்விகளில் ஒன்றாக உள்ளது. இந்தப் பாதிப்பில் சுமார் ஒரு லட்சம் மீனவர்களின் உடைமைகள் சேதமடைந்தன. இதுதவிர, ஆழிப் பேரலையால் பெற்றோர்களை இழந்த 114 மாணவ, மாணவிகளை அரசே தத்தெடுத்து, சமூக நலத் துறை மூலம் அவர்களைப் பராமரித்து வருகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்கின்றனர். சிலருக்குத் திருமணமாகிவிட்டது.
இனி எச்சரிக்கையாக இருப்போம்...
2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலை தாக்கியபோது இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் இல்லை. இந்தோனேசியா கடல் பகுதியில் இருந்த எச்சரிக்கை கருவியும் செயல்படவில்லை. அதோடு, இந்தியாவுக்கு ஆழிப் பேரலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதை அப்போதைய மத்திய அரசு முறையாக அறிவிக்கவில்லை என்ற சர்ச்சை இன்றளவும் இருக்கிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதால், பலர் இந்த ஆழிப் பேரலைக்கு இரையாகினர். இந்தப் பெரும் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகள் இப்போது சுனாமி எச்சரிக்கைக் கருவிகளை நிறுவியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஆழிப் பேரலைகள் வந்தாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அந்த ராட்சத அலைகள் இந்தியக் கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. இப்போது நில நடுக்கம், ஆழிப் பேரலை குறித்த தகவல்களை யுனஸ்கோ தனது இணையதளத்தின் மூலம் தெரிவிக்கிறது. மேலும், ஒவ்வொரு நாட்டின் பேரிடர் நிர்வாகத் துறைக்கும் தகவல் அனுப்பப்படுகிறது. பொதுமக்களும் ஆழிப் பேரலை குறித்த எச்சரிக்கைத் தகவலை ட்ற்ற்ல்:ண்ற்ண்ஸ்ரீ.ண்ர்ஸ்ரீ-ன்ய்ங்ள்ஸ்ரீர்.ர்ழ்ஞ் என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


