சிறுத்தைகளைக் கண்டவுடன் வனத் துறையினரிடம் சென்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கக் கூடாது என்று வன உயிரியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடாது என்றும் கூறுகின்றனர்.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் சிறுத்தைகள் புகுந்து அச்சுறுத்தி வருவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சிறுத்தைகளைப் பிடித்து வேறு இடத்தில் கொண்டுவிடுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது என்கின்றனர் வன உயிரியல் ஆர்வலர்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை 14 ஆயிரத்து 484 சிறுத்தைகள் உள்ளதாக மத்திய அரசின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் அதிகப்படியான சிறுத்தைகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்தான் வசிக்கின்றன.
சிறுத்தை- மனிதனுக்கு இடையேயான மோதல் நீலகிரி மாவட்டம், ஆனைமலை காடுகள், வால்பாறை பகுதிகளில் அதிகம் நேருகிறது. தமிழகத்தில் 2007 முதல் 2014 வரை 18 சிறுத்தைகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தைகள் வேறு இடத்துக்குக் கொண்டு சென்று விடப்படும். கூண்டில் அடைக்கப்பட்ட எந்த உயிரினமும் மீண்டும் வெகு காலம் வாழாது.
தமிழகத்தில் சிறுத்தைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். மனிதனைக் கொன்று உணவாக்கும் ஆள்கொல்லி சிறுத்தைகள் இல்லை என்றும் சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
சிறுத்தையின் குணம்: சிறுத்தைகள் மனிதர்களைக் கண்டு பயந்து ஒதுங்கிப்போகும் இயல்புடையவை. ஒவ்வொரு சிறுத்தையும் அதற்கென குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கேயே சுற்றித் திரிந்து வாழும்.
ஒரு பகுதியிலிருந்து சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்துவிட்டால் அந்த இடத்துக்கு வேறொரு சிறுத்தை (பொதுவாக வயதில் சிறிய) குடி புகுந்துவிடும். புதிய இடமாதலால் அந்தச் சிறுத்தை சில வேளைகளில் எதிர்பாராதவிதமாக மனிதர்களுக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கக் கூடும்.
இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அமைப்பின் வன உயிரியலாளர் ஜெகன்நாதன் கூறியது:
சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களில் பல காலமாகவே வாழ்ந்து வருகின்றன. பெருகும் மக்கள் தொகை அதனோடு பெருகும் மனிதன் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கால்நடைகளின் எண்ணிக்கை, இதனால் அழியும். காட்டுப்பகுதி, காட்டினுள் போதிய மான், காட்டுப்பன்றி முதலான இரை உணவு இல்லாமல் போதல் ஆகிய காரணங்களாலேயே சிறுத்தைகள் கால் நடைகளையோ, எதிர்பாராவிதமாக மனிதர்களையோ தாக்க நேரிடுகிறது.
இதுவே சிறுத்தை- மனிதன் மோதலுக்கு வித்திடுகிறது.
மேலும், மனிதர்களுக்கு ஊறு விளைவிப்பவை எனக் கருதப்படும் சிறுத்தைகளைப் பொறி வைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது. மாறாக, இது பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.
வால்பாறை போன்ற அடர்காடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே புதர்களை அகற்ற வேண்டும், கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
திறந்தவெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கக் கூடாது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வனத் துறை, ஆனைமலை புலிகள் பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து சிறுத்தை- மனிதன் எதிர்கொள்ளலைப் பற்றிய விளக்கப் போஸ்டர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரித்து வால்பாறை பகுதிகளில் ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஜெகன்நாதன்.
சிறுத்தையைக் கண்டால்..
1. சிறுவர், சிறுமியரை இரவு நேரங்களில் தனியே வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
2. சிறுத்தையைக் கண்டால் அதைப் பின்தொடர்ந்து விரட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை அது பயந்து நம்மை தாக்கக்கூடும்.
3. இரவில் தனியே வெளியே செல்லும்போது கைவிளக்கை (டார்ச்) எடுத்துச் செல்லவும்.
4. உரத்தக் குரலில் பாடிக்கொண்டோ, உங்களது கைப்பேசியில் பாடல்களை வைத்துக் கொண்டோ செல்வதும் நல்லது. இதனால் சிறுத்தை, நீங்கள் அதன் இரவு உணவு இல்லை என்பதை உணர்ந்து விலகிப் போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


