புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ராயப்பேட்டையில் கழிவுநீர்க் குட்டையாக அரசு குடியிருப்பு!

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீர் கலந்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2015, 10:00 pm

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீர் கலந்துள்ளது. இந்த நீர் வடியாததால் அரசுக் குடியிருப்புப் பகுதி கழிவுநீர் குட்டைப் போல் காட்சியளிக்கிறது.
 இந்தக் கழிவு நீர் வெளியேற்றப்படாததால், குடியிருப்பு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலை தொடர்ந்தால் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ளும் நிலையில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.
 சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி அரசுக் குடியிருப்பில் மட்டும் 356 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வசித்து வருகின்றனர்.
 சென்னையில் கடந்த 7-ஆம் தேதி முதல் லேசாக மழை பெய்தது. அப்போதிருந்து பீட்டர்ஸ் காலனியில் மழை நீர் தேங்கியது. மழை நீர் வடிவதற்கு போதிய வசதி இல்லாததால், குடியிருப்புப் பகுதி முழுவதும் நீர் தேங்கி நின்றது.
 இந்த நிலையில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, கழிவு நீரும் கசிந்து வெளியேறியது. இப்போது, மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளது.
 கீழ்நிலை குடிநீர்த் தொட்டியில் கழிவு நீர் கலப்பு: பீட்டர்ஸ் காலனி அரசுக் குடியிருப்புக்கு பிரம்மாண்ட கீழ்நிலை குடிநீர்த் தொட்டியிலிருந்தே குடிநீர் வழங்கப்படுகிறது.
 இந்தக் கீழ்நிலை குடிநீர்த் தொட்டிகளில் லாரிகள் மூலமாக நீர் நிரப்பப்படுகிறது. குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான நீரை குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இதன் மூலமாகவே பெறுகின்றனர்.
 இப்போது, இங்கு தேங்கியிருக்கும் கழிவுநீர் கீழ்நிலைத் தொட்டிகளில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக குடியிருப்பில் இருக்கும் கிணறுகளில் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் வழி செய்யப்பட்டது. இப்போது, குடியிருப்பில் இருக்கும் கிணறுகளில் கழிவு நீரும் கலந்து வருகிறது.
 குடியிருப்புவாசிகளின் அவதி: பீட்டர்ஸ் காலனி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் வசிப்பவர்கள் கழிவுநீர் தேக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பின் ஒரு சிலர் வீட்டின் முன்னும், பின்னும் கழிவு நீர் தேங்கியுள்ளது. வீட்டின் உள்ளே செல்ல கழிவுநீரின் மீதுதான் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 மேலும், கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதில் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கழிவுநீர் 10 நாள்களுக்கும் மேலாகத் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 நடவடிக்கை என்ன? பீட்டர்ஸ் காலனி நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் புத்தகத்தில் கழிவுநீர் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுதப்பட்டன. இதனையடுத்து லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெற்றது. ஆனாலும், முழுவதுமாக கழிவுநீரை வெளியேற்ற முடியவில்லை. பின்னர் உதவிப் பொறியாளர் தலைமையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கழிவுநீர் தேங்கும் தீவாகவே இந்தக் குடியிருப்பு உள்ளது.
 இது குறித்து சென்னை மாநகராட்சி 115 ஆவது வார்டு உறுப்பினர், டி.விஜயராமகிருஷ்ணா கூறியதாவது:
 பீட்டர்ஸ் காலனி கழிவு நீர்தேக்கத்தை அகற்ற இதுவரை 8 கழிவு நீர் ஊர்திகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் கழிவுநீர் ஓரளவு வெளியேற்றப்பட்டது.
 ஆனால், பீட்டர்ஸ் சாலை முழுவதுமே கழிவுநீர்க் கால்வாயில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பும் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், விரைவில் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அகற்றப்படும் என்றார்.
 இன்னும் சில இடங்களில்!
 கொளத்தூர் ஆசிரியர் காலனி, பூம்புகார் நகர், செந்தில் நகர், கலெக்டர் காலனி உள்ளிட்ட இடங்களிலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வழிந்தோடுகிறது. மேலும், அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மழை நீர் வடியாமல், கழிவுநீருடன் கலந்தோடுகிறது. வேப்பேரி உள் சாலைகளின் சில இடங்களிலும் கழிவுநீர் பிரச்னைகள் உள்ளன. மேலும், நீலாங்கரை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளிலும் இன்னும் மழை நீர் வடியாமல் இருக்கிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மீண்டும் பெய்த மழையால் பொதுமக்கள் இன்னல்களிலிருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.